×

சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு முறையான சிகிச்சை இல்லை?: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளி பலியானதால் அதிர்ச்சி!!!

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பதோடு அதன் பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனை கட்டுப்படுத்தவே மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மடிப்பாக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுலோச்சனா மேரி என்ற 48 வயது பெண்ணிற்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் நாளுக்கு நாள் சுலோச்சனா மேரியின் உடல்நிலை மோசமாகி உயிரிழந்ததாக அருகில் வசிக்கும் பெண் ஒருவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்று அடுக்கடுக்கான கேள்வியை வீடியோபதிவாக வெளியிட்டு கேட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுலோச்சனா மேரிக்கு மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் அவர் உயிரிழந்துள்ளார் எனவும், அதிகாரிகளின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tags : coroners ,Chennai ,Corona , No proper treatment for Corona patients in Chennai?
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...