×

வாங்குவதற்கு மக்களிடம் ஆர்வம் இல்லை குமரி சந்தைகளில் அழுகும் பலாப்பழம்: வியாபாரிகள் கவலை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பலாப்பழம் சீசன் ஆகும். மாவட்டத்தில் விளையும் பலாப்பழங்கள் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படும். குமரி மாவட்ட பலாப்பழத்திற்கு மற்ற மாவட்டங்களில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் சீசன் தொடங்கிய உடன் வியாபாரிகள் தோட்டங்களில் வந்து பலாப்பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.  வறுக்கை, கூழன் என இரு இன பலாப்பழங்கள் உள்ளன. இதில் வறுக்கை இனத்தை பழத்திற்கும், கூழன் இன பலாகாய்களை சிப்ஸ்க்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் இரு இன பலாப்பழங்களை வியாபாரிகள் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்வார்கள். இதனால் விவசாயிகளுக்கு பலாப்பழங்கள் மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. இந்த வருடம் பலாப்பழம் சீசன் தொடங்கியபோது, கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தது.  இதனால் பலாப்பழங்கள் குமரி மாவட்டத்திலேயே தேங்கியது. இதில் குறைந்த அளவு பலாப்பழங்கள் நெல்லை மாவட்டத்திற்கு வியாபாரிகள் கொண்டு சென்று விற்பனை செய்தனர். அதிக அளவு பலாப்பழங்கள் மாவட்டத்தில் தேங்கியதால், மாவட்டம் முழுவதும்  பல பகுதிகளில் சாலையோரம் பலாப்பழங்களை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.  

ஆனால் பலாப்பழங்களை வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் இல்லாமல் உள்ளது.  குமரி  மேற்கு மாவட்டத்தில் விளைச்சல் ஆன பலாப்பழங்களை சில வியாபாரிகள் வாங்கி  சந்தை பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.  வடசேரி சந்தையிலும் பலாப்பழங்கள் அதிக அளவு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.  அதிக அளவு இருந்தும் வாங்குவதற்கு ஆட்கள் இல்லாத காரணத்தால் அவை அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலாப்பழ வியாபாரி ஒருவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் பலாப்பழம் விளைச்சல் அதிக அளவு இருந்து வருகிறது. பிற மாவட்டங்களுக்கு பலாப்பழங்கள் செல்லாத காரணத்தால், மாவட்டத்தில் பலாப்பழங்கள் தேங்கியுள்ளது.  

மக்கள் வசிக்கும் பகுதியை சுற்றி பலாப்பழம் கிடைப்பதால்  சந்தைக்கு வந்து  வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் இல்லை. பலாப்பழம் கிலோ 50 வரை விற்பனை செய்யப்படும். தற்போது கிலோ 20க்கு விற்பனை செய்தும் யாரும் வாங்கவில்லை. 15க்கு கொடுத்தும் மக்கள் வாங்கவில்லை. இதனால் பழங்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.


Tags : Kumari ,Merchants ,traders , Kumari markets, rotting jackfruit, merchants
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...