சேலத்தில் பிரசித்தி பெற்ற தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு கிடைத்தது ‘புவிசார் குறியீடு’: கைவினைஞர்கள் மகிழ்ச்சி

* புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளின் தரத்தையும், மதிப்பையும் உயர்த்தும் சான்றாகும்.

* தமிழகத்தில் 36வது பொருளாக தம்மம்பட்டி மரச்சிற்பத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

* சேலத்தில் ஏற்கனவே மாம்பழம், வெண்பட்டு போன்ற பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தம்மம்பட்டி: சேலத்தில் பிரசித்தி பெற்ற தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது கைவினைஞர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, மரச்சிற்பங்களுக்கு பிரசித்தி பெற்ற ஊராக உள்ளது. இங்குள்ள காந்தி நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மரச்சிற்பங்களை வடிக்கும் தொழிலில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர். புராணங்கள், இதிகாசங்கள், பண்டைய வாழ்வியல் நிகழ்வுகள் என்று குடிசைக்குள் உருவாகும் சிற்பங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உலகஅரங்கில் மதிமயக்கி நிற்கிறது.

தம்மம்பட்டியில் உருவாகி, தமிழகத்தின் தனித்துவமாக நிற்கும் இந்த சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு, கைவினைஞர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். கடந்த 2012ம் ஆண்டு முதல், இதற்கான முயற்சிகள் தொடர்ந்தது. இந்நிலையில் தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இது கைவினைஞர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தம்மம்பட்டி சில்ப கிராம தலைவர்  செங்கோட்டுவேல் கூறியது: தம்மம்பட்டியில் தூங்குவாகை, மாவலிங்கம், தேக்கு, அத்தி, இலுப்பை போன்ற மரங்களில் சிற்பங்கள் வடிக்கப்படுகிறது.

உயிரோட்டமுள்ள மரத்தில் வடிக்கப்படும் சிற்பங்கள்  சென்னை, டெல்லி, கல்கத்தா போன்ற நகரங்களின் அரசு விற்பனைநிலையங்கள், மத்திய அரசால் நடத்தப்படும் கைவினை கண்காட்சிகள் போன்றவற்றுக்கு அனுப்பப்படுகிறது. அயல்நாடுகளில் நடக்கும் கண்காட்சிகளுக்கும் செல்கிறது. உயிர்ப்புடன் உருவாகும் இந்த சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று கடந்த 2012ம் ஆண்டு முதல் போரடி வருகிறோம். இதன் விளைவாக  தற்போது மத்திய, மாநில அரசுகளின் உதவியோடு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இதனால் உலக அளவில் தம்மம்பட்டி மரசிற்பங்களின் தனித்துவம் அறியப்படும். அதோடு தம்மம்பட்டி என்ற பெயர் உலகளவில் உச்சரிக்கப்படும். இணையதளங்களில் தம்மம்பட்டி என்று பதிவு செய்தால், அதன் அடையாளமாக மரச்சிற்பங்களே முன்னே நிற்கும். இங்கு கலைநயத்துடன் உருவாக்கப்படும் சிற்பங்களுக்கு இணையாக வேறு எங்கும் இல்லை என்பதோடு, நமது ஊரிலுள்ள மரங்களை  கொண்டு உருவாகும் சிற்பங்கள் மற்ற நாட்டில் எந்த சூழலிலும் சிதிலமடையாமல் இருக்கும் என்பதும் உறுதியாகி உள்ளது. நமது படைப்பு வடிவங்களை வேறு யாரும் மாதிரி எடுத்து வடிக்க முடியாது. இது போன்ற மிகப்பெரிய அங்கீகாரங்களால் எளிய மர சிற்ப கலைஞர்களின் வாழ்வாதாரமும் மேம்படும். இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.

Related Stories: