சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: தலைமறைவான காவலர் முத்துராஜ்-ஐ தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது சி.பி.சி.ஐ.டி!

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக காவலர் முத்துராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ்(31). இவர்கள் இருவரும் கடந்த 19ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, 20-ம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். உடல்நலக்குறைவால் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 22ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸ், 23ம் தேதி அதிகாலை ஜெயராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், அந்த விசாரணை தொடங்கும் வரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  கடந்த செவ்வாயன்று உத்தரவிட்டது. உடனடியாக விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை இரவு தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சாத்தான்குளத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் ரகு கணேசனை கைது செய்தனர்.

காவலர் முத்துராஜ் தலைமறைவான நிலையில் அவரை சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர். முத்துராஜ் மீது கொலை உள்ளிட்ட இரண்டு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக காவலர் முத்துராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் கஸ்டடியில் இருந்து தப்பி தலைமறைவான இவரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர். மேலும், இந்த சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக யாரும் அப்ரூவர் ஆகவில்லை என்று சிபிசிஐடி  ஐஜி சங்கர் அறிவித்துள்ளார்.

Related Stories:

>