×

கீழடியில் இரண்டு அடுக்கு தரைத்தளம் கண்டுபிடிப்பு: தொழிற்சாலை இயங்கியிருக்க அதிக வாய்ப்பு

திருப்புவனம்: கீழடி அகழாய்வில் இரண்டடுக்கு புதிய தரைத்தளம் நேற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் தொழிற்சாலை இயங்கியிருக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் பிப். 19 முதல் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடந்து வருகிறது. கீழடியில் 2ம் கட்ட அகழாய்வில் நீண்ட தரைத்தளம் தென்பட்டது. தற்போது 6ம் கட்ட அகழாய்வில் இந்த தரைத்தளத்தின் தொடர்ச்சி கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கொண்டு தரைத்தளத்தின் தொடர்ச்சியை கண்டறிய ஆர்வத்துடன் அகழாய்வில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே நேற்று ஆறு அடி ஆழத்தில் புதிய தரைத்தளம் கண்டறியப்பட்டது. இந்த தரைத்தளத்தில் ஒரே அளவிலான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. செங்கற்கள் பிடிமானத்திற்காக வெண்மைநிற மண் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு செங்கல் மீது மற்றொரு செங்கல் வைத்து இரண்டு அடுக்காக தரைத் தளம் கட்டப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சி தென்புறம் நீண்டுள்ளது. அடுத்து தென்புற அகழாய்வில் குழிகள் தோண்டும் போது மேலும் தொடர்ச்சி கிடைக்க வாய்ப்பு உள்ளது என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே கிடைத்த செங்கல் கட்டுமானங்கள் தொழிற்சாலை போன்ற அமைப்பை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும், மேலும் தரைத்தளங்கள் கிடைத்து வருவதால் இங்கு தொழிற்சாலை இயங்கி இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Tags : factory , Underground, two-story floor, factory
× RELATED இ - பாஸ் நடைமுறையை ரத்து செய்ய...