×

தினகரன் செய்தி எதிரொலி: வைகை மையமண்டபம் மக்கள் பார்வைக்கு வருவது எப்போது? பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

மதுரை: தினகரன் செய்தி எதிரொலியாக, அழிவின் பிடியில் இருந்து புத்துயிர் கண்ட பழம்பெருமைக்குரிய மதுரை வைகையாற்று மைய மண்டபத்தின் கட்டுமானப் பணிகளை முடித்து விரைந்து திறந்திட வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். மதுரை, வைகை ஆற்றில் திருமலைராயர் படித்துறை பகுதியில் காளிங்கராய மன்னரால் கி.பி 1293ல் மைய மண்டபம் கட்டப்பட்டது. 36 தூண்களுடன் கம்பீரமான இந்த மண்டபத்தில் ஆடல், பாடல், நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. பழங்கால மக்களின் தொன்மை நினைவுச்சின்னமான இந்த மையமண்டபத்தில் 12 கல் தூண்கள் சாய்ந்து விழுந்து விட்டன. மீதமுள்ள தூண்களும் எப்போது கீழே விழும் எனத் தெரியாத நிலையில் பரிதாபமாக காட்சியளித்தன.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வைகையில் பெரும் வெள்ளம் இல்லாத நிலையில், மைய மண்டபத்தின் மிச்சப்பட்ட தூண்களும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தன. கலை எழில் மிக்க இந்த மண்டபத்தின் மேலே திசைக்கொன்றாக நான்கு மூலைகளிலும் காளை உருவம் சுதை சிற்பமாக வைக்கப்பட்டிருந்தது. ஒரு தலையில் ஈருடலாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த சிற்பம் காண்போரை வியக்க வைக்கும் கலை நேர்த்திமிக்கதாகும். இந்த கற்சிற்பமும் சிதைந்து போனது. இம்மண்டபம் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வந்தது.

பழமை வரலாற்றுப் பெருமைக்குரிய இந்த வைகையாற்று மைய மண்டபத்தின் அடையாளம் தொலைந்து போகும் அபாய நிலை குறித்து, 2018 அக். 1ல் வெளியான தினகரன் நாளிதழில், ‘வைகையில் வரலாற்று சாட்சியாக விளங்கும் மைய மண்டபத்தை புனரமைப்பது எப்போது?’ என்ற தலைப்பில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு, மண்டபத்தை காக்க கோரி, மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் ஹக்கீம் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். வைகை நதி மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மண்டபத்தைக் காக்க கோரிக்கை விடுத்து வந்தன.

இதைத்தொடர்ந்து, மைய மண்டபம் பழமை மாறாமல் சீரமைக்கப்படும் என்று ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தெரிவித்ததுடன், நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஒன்றரை ஆண்டுகள் முன்பு மண்டபம் ரூ.43 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி துவங்கியது. வைகையாற்று வெள்ளத்தை எதிர்நோக்கும் வகையில் படகு வடிவில் இந்த மண்டபம் கட்டுமானம் கண்டு வருகிறது. இந்த ஆண்டு சித்திரைக்கும் முன்னதாக பணிகளை முடிப்பதாக இருந்தது. ஆனால், மண்டப கட்டுமானப்பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில் இருக்கிறது. மதுரை சமூக ஆர்வலர்கள் அமுதன், ராஜன், மணிகண்டன் கூறும்போது, ‘‘மீனாட்சியம்மனின் தீர்த்தவாரி மண்டபமாகவும் இது இருந்தது. பழைய முறைப்படி இதனை தீர்த்தவாரி மண்டபமாக அறிவித்து, மீனாட்சி சொக்கநாதரை எழுந்தருளச் செய்யவேண்டும்.

மீனாட்சி கோயில் திருவிழாவின் தொடர்ச்சியான அஸ்திர பூஜை இம்மண்டபத்தில் 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வந்ததும் அறியப்படுகிறது. காலப்போக்கில் விடுபட்ட இந்த பூஜையையும் இங்கு கோயில் நிர்வாகம் நடத்திட வேண்டும். மண்டபத்தின் பணிகளை முழுமையாக முடித்து, பழமை அடையாளங்கள் மாறாமல் மதுரையின் அடையாளமாக மக்கள் பார்வைக்கும், ஆன்மிக பயன்பாட்டிற்கும் வழங்கிட வேண்டும்’’ என்றனர்.


Tags : completion ,Vaigai Center , Dinakaran, Vaigai Central
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா