×

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்பட 4 பேர் கைது: காவலில் எடுத்து விசாரிக்கிறது சிபிசிஐடி

தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகள் இருவர் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில்  நேற்று இன்ஸ்பெக்டர், மேலும் ஒரு எஸ்ஐ, 2 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஏட்டு முத்துராஜ் அப்ரூவர் ஆகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார் கைதான இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐகளை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை  சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கொரோனா  ஊரடங்கு நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்ததற்காக கடந்த 19ம் தேதி  சாத்தான்குளம் எஸ்ஐ ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் போலீசாரால் கைது  செய்யப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட  பென்னிக்ஸ் கடந்த 22ம் தேதி இரவும், ஜெயராஜ் 23ம் தேதி அதிகாலையும்  அடுத்தடுத்து உயிரிழந்தனர். சாத்தான்குளம் போலீசார் விடிய, விடிய லத்தியால் கடுமையாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. போலீசாரை கண்டித்து சாத்தான்குளம்  வியாபாரிகள் நடத்திய மறியல் போராட்டத்தை தொடர்ந்து  இன்ஸ்பெக்டர் தர், சப்.இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன்,  போலீசார் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  சாத்தான்குளம் போலீசார் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர்.

இந்த  சம்பவத்தை தானாக முன்வந்து விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, கோவில்பட்டி  மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டது. ஆனால் மாஜிஸ்திரேட் விசாரணையின் போது போலீசார்  ஒத்துழைப்பு இல்லை என்றும் ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர்  மிரட்டல் தொனியில் செயல்பட்டது குறித்தும், போலீஸ்காரர் மகாராஜா அவதூறு  பேசியது குறித்தும் மதுரை ஐகோர்ட் கிளையில் மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல்  செய்தார். இதையடுத்து  போலீஸ்காரர் மகாராஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகிய இருவரும் மாற்றப்பட்டனர்.  மாஜிஸ்திரேட் விசாரணையின் போது போலீசார்  லத்தியால் இரவு முழுவதும் வியாபாரிகள் இருவரையும் தாக்கியது தெரியவந்தது.  போலீஸ் ஸ்டேஷனில் இருந்த ரத்தக்கறை, லத்தி ஆகியவை இந்த வழக்கின் முக்கிய ஆவணங்களாக கிடைத்தது. சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த பெண்  ஏட்டு ரேவதி அளித்த சாட்சியம் இந்த வழக்கின் துருப்புச்சீட்டாக மாறியது. இந்த சம்பவத்தால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
எனினும் சாட்சியங்கள் அழியக் கூடும் என்பதால் மதுரை ஐகோர்ட்  நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர், சிபிஐ இந்த வழக்கை ஏற்கும் வரை  இடைக்காலமாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட்டனர்.  இதையடுத்து, வழக்கு ஆவணங்கள் நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம்  ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், இரு எப்ஐஆர்கள் பதிவு செய்தனர். இந்த விசாரணைக்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து வந்த  சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் மட்டும் சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாக பிரிந்து சென்று பல்வேறு ஆவணங்களை திரட்டினர். இதன் அடிப்படையில் எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டுகள்  முருகன், முத்துராஜ் ஆகியோர் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டது. உடனடியாக களமிறங்கிய சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டத்தில் தனது  உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த எஸ்ஐ ரகு கணேஷ் என்ற கொம்பனை கைது செய்தனர். அவரை நள்ளிரவு தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  பேரூரணி சிறையில் அடைத்தனர்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில்  இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரையும் வழக்கில் சேர்த்தனர்.  தொடர்ந்து நேற்று அதிகாலை  தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சொந்த  ஊரான தேனிக்கு தப்பிச் சென்ற போது நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான்  பகுதியில் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.மேலும், ஆத்தூரில்  பதுங்கியிருந்த எஸ்ஐ பாலகிருஷ்ணன், நெல்லையில் இருந்த ஏட்டுகள் முருகன், முத்துராஜ் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடந்தது. பின்னர் நேற்றிரவு  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபின் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ பாலகிருஷ்ணன், ஏட்டு   முருகன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் தூத்துக்குடி குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில்  கைது செய்யப்பட்ட ஏட்டு முத்துராஜ் அப்ரூவர் ஆக விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் அவரை சிபிசிஐடி போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

இதன் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோரை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் ெசய்ய உள்ளனர்.  காவல் விசாரணையில் உண்மைகள் வெளிவரும் எனத் தெரிகிறது. மேலும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக பணியாற்றிய 4  பேரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடி போலீசாரின் பிடி இறுகி வருகிறது.

வைரலாகும் வாக்கி-டாக்கி ஆடியோ வேறு மாவட்டத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற இன்ஸ்பெக்டர், எஸ்ஐ சிக்கியது எப்படி?

சிபிசிஐடி போலீசார், சாத்தான்குளம்  எஸ்ஐ ரகு கணேஷை நேற்று முன்தினம் இரவு கொலை வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டுக்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் தேடி வந்தனர். வெளி மாநிலங்களுக்கு தப்பிச் செல்ல இவர்கள் திட்டமிட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் அனைத்து சோதனைச் சாவடிகளையும் உஷார்படுத்தினர். இதுபற்றிய போலீசாரின் வாக்கி டாக்கி ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பேசும் காவலர், “சாத்தான்குளம் பிரச்னை எல்ேலாருக்கும் தெரியும். தற்போது எஸ்ஐ பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வேறு மாவட்டங்களுக்கு தப்பிச் செல்வதாக தகவல் வந்துள்ளது.

எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். பார்டர் செக்போஸ்ட் உஷாராக இருக்க வேண்டும் அனைத்து வாகனங்களையும் முழுவதுமாக செக்கப் பண்ணி அனுப்ப வேண்டும். அவர்களது போட்டோக்களை உங்கள் மெயிலில் அனுப்புகிறோம். ஏற்கனவே உங்கள் மொபைலில் அவர்கள் போட்டோ இருக்கலாம். தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட எல்லை செக் போஸ்ட்களில் வாகனங்களில் வருவோரை கண்டறிந்து முழுவதுமாக சோதனையிட்ட பின்னரே அனுமதிக்க வேண்டும்” என பேசியுள்ளார். இவ்வாறு சிபிசிஐடியின் பிடி இறுகியதால் தப்பிச் செல்ல நினைத்த இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மற்றும் போலீசாரின் முயற்சி ேதால்வி அடைந்தது. இதையடுத்தே அவர்களை சிபிசிஐடி போலீசார் மடக்கியுள்ளனர்.

போலீசை போலீசாரிடமிருந்து காப்பாற்ற போலீஸ் பாதுகாப்பு
சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் அடைந்த வழக்கு விசாரணைக்காக நியமிக்கப்பட்ட  கோவில்பட்டி மாஜிஸ்திரேட்  பாரதிதாசனிடம் முக்கிய  சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் போலீஸ் ஏட்டு ரேவதிக்கு, ஊதியத்துடன் கூடிய  விடுப்பு வழங்குவதோடு, அவரது வீட்டுக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்,  பேய்க்குளம் அடுத்த அறிவான்மொழியில் உள்ள ஏட்டு ரேவதியின் வீட்டிற்கு  ஆயுதப்படையைச் சேர்ந்த நான்கு போலீசார் இரவு, பகலாக சுழற்சி முறையில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீதித்துறையை மட்டுமே நம்புகிறோம் பலியான வியாபாரியின் மகள் கண்ணீர்
போலீசார் தாக்கியதில் பலியான வியாபாரி ஜெயராஜ் மகள் பெர்சி அளித்த பேட்டி: ‘‘இந்த சம்பவத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும், கொலையாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதற்காக முதற்கட்டமாக நியாயமான விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசன், எங்களது குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை தங்களது குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாக கருதி குரல் கொடுத்து எங்களுக்காகப் போராடிய அனைவருக்கும் நன்றி. எனது தந்தை, தம்பியை கொலை செய்த கொலையாளிகளிடம் விசாரணை நடத்தி விரைவில் நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நம்புகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் இனி எங்கேயும் நடக்கக்கூடாது. எங்களுக்கு துன்பம் வந்த நாள் முதல் உண்மையை உலகத்திற்கு எடுத்துச் சென்ற பத்திரிகைகளுக்கு நன்றி.

சிபிசிஐடி அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர், துணை முதல்வர் இங்கு வருவதாக இதுவரை எங்களுக்கு எந்தவித தகவலும் இல்லை. அரசு வழங்கும் வேலை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எங்கள் குடும்பத்திற்கு நடந்தது போல் இனி வேறு யாருக்கும் எங்கும் நடக்கக் கூடாது. அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் முழுமையாக கண்காணிக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம் நாங்கள் நீதித்துறையை மட்டுமே நம்பி உள்ளோம். நாங்கள் அரசுக்கோ அல்லது போலீசுக்கோ எதிரானவர்கள் இல்லை. எனது தந்தை, தம்பியை கொலை செய்த சாத்தான்குளம் காவல் துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்கள் தரப்பு நியாயம். இதற்காக கைது நடவடிக்கை எடுத்த சிபிசிஐடி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.

ஏட்டை தள்ளி விட்டு தப்பி ஓட முயற்சி
வியாபாரிகள் மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டதால், ஏட்டுகள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர். இதுகுறித்து அவர்களுக்கு தகவல் தெரிய வந்ததால் நேற்று முன்தினம் இரவு அவர்கள் புதியம்புத்தூர் அருகே நடுவக்குறிச்சி பகுதி வழியாக பைக்கில் தப்பிச் சென்றனர். தூத்துக்குடியில் இருந்து 3 எஸ்ஐகள் தலைமையிலான தனிப்படையினர் பின்தொடர்ந்து சென்றனர். நடுவக்குறிச்சி அருகே தட்டப்பாறையைச் சேர்ந்த ஒரு ஏட்டு அவர்களது பைக்கை மடக்க முயன்றார். ஆனால் அந்த ஏட்டை தள்ளி விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Inspector ,SI , Four arrested, including ,Inspector, SI, custody
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு