×

ஆப்டிக்கல் ஷோரூம், கிளினிக்குகள் இல்லை மொபைல், கம்ப்யூட்டர்தான் கதின்னு கிடக்காதீங்க ‘கண்’மணியை ரொம்ப பத்திரமா பாத்துக்குங்க

* அதிகரிக்கும் பார்வை குறைபாடு  
* மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை

சென்னை: ஊரடங்கு எப்போது முடியும் என்று யாருக்குமே தெரியவில்லை. கொரோனா நோயை கட்டுப்படுத்த இது ஒன்றே வழி என்ற நிலைக்கு அரசுகள் வந்துவிட்டன.  நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. வீட்டுக்குள் இருப்பவர்கள் பலர் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் மூழ்கி கிடக்கின்றனர். பலருக்கு பொழுதுபோக்கு டிவிதான். அத்தியாவசியமாக இயங்கும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்குமாறு கூறியுள்ளன. இதனால் அவர்கள் பல மணி நேரம் கம்ப்யூட்டரை  பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் பலர் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், கண் உலர்தல், தலைவலி, பார்வை மங்குதல் போன்ற பல பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். இதுபோல், குழந்தைகளுக்கு பாடங்கள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் அவர்களும் பலமணி நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கும் பார்வைக்கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில், குழந்தைகள் பல மணிநேரம் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் செலவிடுவதால் தூரப்பார்வை மற்றும் கண் மங்குதல் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன என கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளால் 5 முதல் 15 வயதுள்ள குழந்தைகள் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் முன்பு நேரத்தை செலவிடுவது முன்பைவிட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.  இதனால் குழந்தைகளின் பார்வை பாதிக்கப்படும் என 84 சதவீத பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். குழந்தைகள் முன்பை விட சுமார் 5 மணி நேரம் அதிகமாக மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் நேரத்தை செலவிடுவதாக 54% பெற்றோர் தெரிவித்துள்ளனர். படிப்பு தொடர்பாக ஆன்லைனில் தேடும்போது தவறான அல்லது தேவையற்ற சில வெப்சைட் களை பார்க்க நேரிடுவதாக 57 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தைகள் ஆன்லைனில் இருக்கும்போது அவர்கள் எதை பார்க்கிறார்கள் என்று கண்காணிப்பதாக 61 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதுபோல், வீட்டில் சும்மா இருப்பவர்கள் கூட பெரும்பாலும் மொபைல், டிவியில் நேரத்தை செலவிடுகின்றனர். இதனால், சமூக வலைதளங்களை பார்ப்பது 87% அதிகரித்துள்ளது. பாலியல் வெப்சைட்டுகளை பார்ப்பது 95% அதிகரித்துள்ளது. டிவி பார்க்கும் நேரம் 38 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு டிஜிட்டல் உலகில் மூழ்கி விடுவதால் கண் பார்வைக் கோளாறுகள் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், “ஊரடங்கால் கண் சோர்வு, கண்வலி, கண் உலர்தல், தலைவலி போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் மூலம் கண் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். இதில் பெரும்பாலான மக்கள் மேற்கண்ட பிரச்னைகளை தெரிவித்துள்ளனர். கண்களில் மேற்கண்ட பாதிப்பு சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளதை காணமுடிகிறது. கம்ப்யூட்டர், மொபைல் போன் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மிகவும் ஆபத்தானது” எனத் தெரிவித்தார்.  மற்றொரு மருத்துவர் ஒருவர் கூறுகையில், “சில கண் பிரச்னைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க வேண்டும். இது தற்போதைய ஊரடங்கில் சாத்தியமில்லை. எனவே சில கண் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற முடியாமல் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது”  என்றார்.

 இதுபோல் கண் கண்ணாடி அணிபவர்கள் பலர் அவதிப்படுகின்றனர். கண்ணாடி மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டும், பழைய கண்ணாடியை வைத்துக்கொண்டு சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கண்ணாடி உடைந்து விட்டதால் சிலர் சிரமப்படுகின்றனர். சிலர் கீறல் ஏற்பட்டுள்ள கண்ணாடியை வைத்து சமாளிக்கின்றனர். இவை பார்வையை மேலும் மோசமாக்கும் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏறக்குறைய பாதி பேர் கண் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். கண் மருத்துவமனைகள், ஆப்டிக்கல் ஷோரூம், கிளினிக்குகள் இல்லாததால் கண்ணாடிகளை மாற்ற முடியவில்லை. மேலும், கண் பரிசோதனை செய்வதற்கும், புதிய கண்ணாடி வாங்குவதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. எனவே, கண் பாதிப்புள்ளவர்களை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வில் அரசு முடிவுகள் எடுக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பதாக உள்ளது. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை இல்லாவிட்டால் கண் பார்வை பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : showroom ,clinics , Optical Showroom, Clinics, Mobile, Computer, Gadgets
× RELATED டெல்லி அரசு மருத்துவமனைகள், மொகல்லா...