×

காவல் விசாரணையில் கொடூர தாக்குதல்கள் மனித உரிமைகளை கற்க மறந்ததா காக்கி?

* தண்டனையில் தப்பிக்கும் போலீசார்
* புள்ளிவிவரங்கள் காட்டும் உண்மை

சென்னை: சாத்தான்குளத்தில் போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் தாக்குதலில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. காவல்நிலையங்களில் விசாரணைக் கைதி மரணம் அடைவது புதிய சம்பவம் அல்ல. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் மீதான குற்றங்கள் நிரூபணம் ஆகாமல் விடுவிக்கப்பட்டு விடுகின்றனர்.  2001ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை விசாரணை கைதிகள் 1,727 பேர் இறந்துள்ளனர். இதுதொடர்பாக 810 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 334 போலீசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை வழக்குகளில் 26 போலீசார் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் போலீஸ் விசாரணையில் 70 பேர் இறந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2017ம் ஆண்டில் 100 பேர், 2016ம் ஆண்டில் 92 பேர், 2015ம் ஆண்டில் 97 பேர், 2014ம் ஆண்டில் 93 பேர் போலீஸ் விசாரணையில் மரணம் அடைந்துள்ளனர்.மேற்கண்ட லாக்கப் மரணங்களில், 2017ல் 5%, 2016ல் 8.7%, 2015ல் 6.2 சதவீதம், 2014ல் 9.7% பேர் மட்டுமே போலீசார் தாக்கியதால் மரணமடைந்துள்ளார்கள் என புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2001 முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நடந்த லாக்கப் மரணங்களில் உ.பி., ம.பி., ‍‍சட்டீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்கள் தவிர பிற மாநிலங்களில் போலீசார் மீதான குற்றம் நிரூபணம் ஆகவில்லை.

இதுபோல் தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மேற்கண்ட காலகட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மேற்கண்ட புள்ளி விவரங்களின்படி, போலீசார் மீது வழக்குகள் ஏராளமாக பதிவு செய்யப்படும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தண்டனை பெற்றுள்ளனர். மக்களின் நண்பனாக, பாதுகாவலனாக விளங்கும் காவல்துறையில் விசாரணை கைதிகள் நடத்தப்படும் வழிமுறைகள் மனித உரிமை பற்றி அவர்கள் இன்னும் கற்க வேண்டியது தான் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இந்த எண்ணத்தை மாற்றும் வகையில் காவல்துறையினர் அணுகுமுறையும் விசாரணை நடவடிக்கைகளும் மாற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

துன்புறுத்தலில் தினமும் 5 பேர் பலி?
இந்திய காவல் நிலையங்களில் கடந்து 2019ம் ஆண்டில் விசாரணைக் கைதிகள் மரணம் தொடர்பாக துன்புறுத்தலுக்கு எதிரான தேசிய அமைப்பு சமீபத்தில் ஆய்வு அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 2019ம் ஆண்டு காவல் நிலையத்தில் 1,731 பேர் இறந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.  அதாவது சராசரியாக தினமும் 5 பேர் மரணமடைகின்றனர். இதில் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்ட 1606 பேர் மற்றும் காவல்நிலையத்தில் விசாரணைக் கைதியாக பிடிக்கப்பட்ட 125 பேர் அடங்கும். இருவரில் 93 பேர் போலீஸ் துன்புறுத்தல் காரணமாகவும், 24 பேர் சந்தேக முறையிலும் மரணம் அடைந்துள்ளனர். 16 பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும் 7 பேர் உடல்நிலை குறைவாலும்,  ஒருவர் காயத்தாலும் இறந்ததாகவும் ஐந்து பேர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 14 பேர், தமிழகம் மற்றும் பஞ்சாபில் தலா 11 பேர்,  பீகாரில் 10 பேர் லாக்கப் மரணம் அடைந்துள்ளனர் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துன்புறுத்தும் வகைகள் விசாரணைக் கைதிகள்
காவல்நிலையங்களில் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது குறித்து துன்புறுத்தலுக்கு எதிரான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. அதில், இரும்பு கம்பியால் அடித்தல், சூடு போடுதல், நகங்களை கட்டிங் பிளேயரால் அழுத்துதல், தலைகீழாக கட்டிவைத்து அடித்தல், வாயில் சிறுநீர் கழித்தல், பெண் கைதியாக இருந்தால் பாலியல் தொந்தரவு, கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் உதைத்தல் போன்ற துன்புறுத்தல்கள் சில காவல் நிலையங்களில் மேற்கொள்ளப்படுவதாக  குறிப்பிட்டுள்ளது.

Tags : attacks ,police investigators , Police investigations, brutal assault, forgetting to learn human rights, khaki
× RELATED ஹிஸ்புல்லா தாக்குதல்; கேரளா வாலிபர் பலி: 2 இந்தியர்கள் படுகாயம்