×

யுஜிசி அனுமதி இல்லை பிஎட் சேர்க்கை ரத்து

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி கிடைக்காமல் போனதை அடுத்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பிஎட் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களிடம் வாங்கிய கட்டணங்களை திருப்பித் தரவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் கடந்த 2018-19ம் ஆண்டில் பிஎட் சேர்க்கை நடத்தப்பட்டது. அந்த பட்டப் படிப்பை நடத்துவதற்கு, பல்கலைக்கழக மானியக் குழு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து அந்த பட்டப்படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் ரத்தினகுமார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  2018-19ம் ஆண்டுக்கான பிஎட் பட்டப் படிப்பில் தமிழ்நாடு திறந்த நிலைக் கழகம் மாணவர் சேர்க்கையை நடத்தியது. ஆனால் பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியை பெறவில்லை. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்து தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்துக்கு கடந்த வாரம் ஒரு கடிதம் வந்தது. அதில், 2018-19ம் ஆண்டுக்கான பிஎட் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும் என்று் இருந்தது. பல்கலைக் கழகம் போராடியது. ஆனால், இறுதி வரை அனுமதி கிடைக்கவில்லை.

இதையடுத்து, மிகுந்த வருத்தமுடன் பிஎட் சேர்க்கையை ரத்து செய்வதாகவும், வாங்கிய கட்டணத்தை திரும்ப தருவதாகவும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த சேர்க்கையின் போது, பல்கலைக் கழகத்தின் சார்பில் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் பல்கலைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2020ம் கல்வி ஆண்டுக்கான அனுமதியும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழக வரலாற்றில் அரசு பல்கலைக் கழகத்துக்கே அனுமதி கிடைக்காதது வியப்பாக இருக்கிறது. மேலும் படிப்புக்காக வாங்கிய கட்டணத்தை திருப்பித் தருவதும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகமாகத்தான் இருக்கும். இந்த பல்கலைக் கழகத்தின் இந்த முடிவால் பிஎட் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : UGC , UGC, no admission, PET admission, cancellation
× RELATED அரசுப்பணிகளில் சேருபவர்களின்...