×

வெளிநாடுகளில் உள்ள 28 ஆயிரம் தமிழர்களை சொந்த ஊர்களுக்கு திரும்ப அழைத்துவர என்ன திட்டம் உள்ளது: மத்திய அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திமுக செய்திதொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்,  இன்னும் 27,956 பேரை அழைத்து வர வேண்டியுள்ளது. அதற்கு 158 விமானங்கள் இயக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், விமானங்கள் தரையிறங்க மாநில அரசு ஒப்புதல் வழங்கவில்லை என மத்திய அரசு புகார் தெரிவித்துள்ளது.  தமிழக அரசு சார்ட்டர்ட் விமானங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது. வெளிநாடுகளில் இந்திய குடிமக்கள், சாலைகளிலும், பூங்காக்காலிலும் தான் தூங்குகின்றனர் என்றார்.தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்பது தவறு. ஒரு நாளுக்கு 7 விமானங்கள் இயக்கப்படுகிறது.

அதில் வருபவர்களை தனிமைப்படுத்த வேண்டியுள்ளது. கூடுதல் விமானங்கள் இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களுக்கு, அங்குள்ள இந்திய தூதரகங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. சிக்கித் தவிப்பவர்களை மீட்பது குறித்து மத்திய அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கிறேன். அதன் மூலம் தீர்வு காண முடியும். அதற்கு கால அவகாசம் வேண்டும்  என்றார். இக்கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.அன்றைய தினம்,  வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் 27,956 தமிழர்களை அழைத்து வர என்ன திட்டம் உள்ளது என்பது குறித்தும், நேர்மறையான தீர்வை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Tamils , Over 28,000 Tamils to return to their hometowns
× RELATED தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது...