×

கடந்த 2015ம் ஆண்டுபோல இந்த ஆண்டும் சென்னையில் பெருவெள்ளம் ஏற்படும்: ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: கடந்த 2015ம் ஆண்டுபோல் இந்த ஆண்டும் சென்னையில் பெருவெள்ளம் ஏற்படும் என்று ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறினார். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்குகிற ஐடி நிறுவன நிர்வாகிகளுடன் வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை எழிலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்றின் காரணமாக 6வது முறையாக ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஐடி நிறுவனங்கள் செயல்படுவதற்கான வழிமுறைகள், விதிகளை அரசு வகுத்துள்ளது. வீட்டில் இருந்தபடியே பணியாற்ற நிறுவனங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத ஊழியர்களுடனும், பிற மாவட்டங்களில் 100 சதவீத ஊழியர்களுடனும் வரும் 6ம் தேதி முதல் செயல்பட தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார். அப்படி பணியாற்றும் போது சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் ஐடி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

சென்னையில், கடந்த 2015ம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டது. தற்போது சென்னையில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவதால் மீண்டும் இந்த ஆண்டு அதிக மழை பெய்யும் என ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காலங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய காலகட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேரிடர் காலத்திற்கு முன், பேரிடர் காலம், அதற்கு பின் என 3 பிரிவாக பிரித்து இந்த காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து 32 வருவாய் மாவட்ட நிர்வாகத்திற்கும், கடலோர மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கஜா புயல், வர்தா புயல் ஆகிய நேரங்களில் தமிழக அரசு முன்கூட்டியே மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தான் ஒரு உயிரிழப்புக்கூட ஏற்படவில்லை. அதேபோன்று, மழை காலத்திற்கு முன்பாக அனைத்து நடவடிக்கைகளும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார். பேரிடர் காலத்தை மூன்று பிரிவாக பிரித்து இக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து 32 வருவாய் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Tags : researchers ,Chennai ,Udayakumar ,Mathrubhumi ,IIT , Mathrubhumi , Udayakumar , IIT researchers ,warned
× RELATED மார்ச் 29ல் ரீரிலீசாகும் அழகி