×

நடப்பு கல்வியாண்டில் 70 % கட்டணத்தை 3 தவணையாக வசூலிக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்க பெற்றோர்களை நிர்பந்திக்க கூடாது என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. பேரிடர் மேலாண்மை சட்டப்படி இதுபோன்ற பேரிடர் காலங்களில் கல்வி கட்டணம் தொடர்பாக அரசு அரசாணை  பிறப்பித்தாலும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் திட்டங்கள் கொண்டு வர தமிழக அரசு தவறிவிட்டதாக கூறி கோவையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பேரிடர் மேலாண்மை சட்டப்படி கொண்டு வரப்பட்ட இந்த அரசாணையை மீறும் கல்வி நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்க தமிழக அரசு எந்த புகார் எண்களையும் அறிவிக்கவில்லை. அரசாணையை மீறிய கல்வி நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களையும் அரசு வெளியிடவில்லை என்று வாதிடப்பட்டது.

அப்போது, ஏற்கனவே வேறொரு வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் சார்பில் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட மனு பரிசீலனையில் உள்ளது.அதன்படி, இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தில் 70 சதவீத கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளன என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Tags : schools , Private schools, Government of Tamil Nadu
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...