×

விமானங்களுக்கு இணையான கட்டணத்துடன் 2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு

புதுடெல்லி: வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அவற்றின் கட்டணம் விமானம், பேருந்துகளுக்கு இணையாக இருக்கும்,’ என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.நாட்டில் உள்ள 109 வழித் தடங்களில் 151 நவீன தனியார் ரயில்களை இயக்குவதற்கான தகுதி தேர்வுக்கு ரயில்வே துறை அழைப்பு விடுத்து இருந்தது. இதனைத் தொடர்ந்து பயணிகள் சேவையைத் தொடங்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் இதற்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தன.இந்நிலையில், இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத் தலைவர் வி.கே. யாதவ் நேற்று கூறிய விவரங்கள் வருமாறு:

* ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்கள் பயணிகள் ரயில் சேவையை தொடங்குவதன் மூலம் நல்ல தொழில்நுட்பத்துடன் கூடிய அதி விரைவு சேவை மக்களுக்கு கிடைக்க வழி வகுக்கும்.
* நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் ரயில் பெட்டிகளை 40,000 கிலோ மீட்டர் பயண தூரத்துக்கு பிறகு, அதாவது மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை, பராமரித்தால் போதுமானது. ஆனால், தற்போதைய ரயில் பெட்டிகள் 4,000 கி.மீ. தூரம் பயணித்த உடன் பராமரிக்கப்பட வேண்டி உள்ளது.
* தற்போது இயக்கப்படும் 2,800 மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருந்து 5 சதவீதம் மட்டுமே தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது. இந்த ரயில்களை தனியார் நிறுவனங்களே பராமரித்து கொள்ள வேண்டும்.
* வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தனியார் ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த ரயில்களுக்கான கட்டணம் விமானம், பேருந்து கட்டணத்துக்கு இணையாக இருக்கும்.
* தனியார் ரயில்களை இயக்க அனுமதிப்பதன் மூலம், காத்திருப்போர் பட்டியல் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும். எந்தெந்த வழித்தடங்களுக்கு அதிகளவிலான ரயில்கள் தேவையோ அதற்கேற்ப ரயில்கள் இயக்கப்படும்.
* ரயில்வேயின் வழித் தடங்கள், ரயில் நிலையங்கள், மின்சாரம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தனியார் நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
* தனியார் ரயில் சேவையின் மூலம், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, சிறந்த சேவையை, குறைந்த விலையில் மக்கள் பெறுவார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

லேட்டா வந்தால் பைன்
யாதவ் மேலும் கூறுகையில், ‘‘தனியார் ரயில்கள் ஒரு லட்சம் கி.மீ. தூரப் பயணத்துக்கு ஒரு முறை தாமதமாக வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீறும் பட்சத்தில் அபராத‍த் தொகை வசூலிக்கப்பட உள்ளது. இன்ஜினுடன் பொருத்தப்படும் மீட்டர் அடிப்படையில் மின் பயன்பாட்டிற்கான கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதனால், தனியார்கள் குறைந்தளவு மின்சாரத்தை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள். ஏழைகள் வாழ்வை பறிப்பதா? தனியார் ரயில் சேவை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிடடுள்ள டிவிட்டர் பதிவில். `ஏழைகள் பயணிக்கும் உயிர் நாடியாக ரயில்கள் இருந்து வந்தன. ஆனால், தற்போது அரசு அதனையும் அவர்களிடம் இருந்து பறிக்க பார்க்கிறது. மக்களிடம் இருந்து எதை வேண்டுமானாலும் பறித்து கொள்ளுங்கள். ஆனால், நாட்டு மக்கள் இதற்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Private trains, April 2023, with fares, for flights
× RELATED இமயமலைத் தொடரில் அமைந்துள்ள...