×

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதி கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளால் சாலையில் தேங்கும் கழிவுநீர்: தொற்றுநோய் அச்சத்தில் பொதுமக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், புல், குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காஞ்சிபுரம் நகரத்தின் மேட்டுத்தெரு, எம்எம் அவென்யு ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கால்வாயில் விடப்படுகிறது. நகராட்சியின் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம், கால்வாயின் தடுப்பு சுவர்களை உடைத்து ஆங்காங்கே கழிவுநீரை வெளியேற்றுகிறது. இதனால் பல இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில், ரங்கசாமி குளம் பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைக் கழிவுகள் அடைத்துக் கொண்டு கழிவுநீர் முறையாக வெளியேறாமல் தேங்கி, சாலையில் வழிந்தோடியது. மேலும் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு, குப்பை மேடாகவே காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதிகளில் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் தடுப்பு முன்னெச்சரிக்கையாக அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோல், கைகளை கழுவுகின்றனர். கொரோனா கிருமிகளுடன் வரும் கழிவுநீர், மாஸ்க் ஆகியவை இந்த கழிவுநீரில் கலந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், நகராட்சி நிர்வாகமோ, ஒரே ஒரு சுகாதாரப் பணியாளரை அனுப்பி கால்வாயில் அடைத்துள்ள கழிவுகளை எடுக்க நடவடிக்கை எடுத்தது. பிளாஸ்டிக் மற்றும் குப்பைக் கழிவுகள் அதிகம் இருந்ததால், முழுவதுமாக அகற்ற முடியாமல் மீண்டும் கழிவுநீர் அங்கு தேங்கி நின்றது. எனவே, நகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் முறையாக வெளியேற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.



Tags : pond area ,Kanchipuram Rangasamy , Kanchipuram Rangasamy Pond, Canal, Plastic Waste, Sewerage
× RELATED காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில்...