×
Saravana Stores

வெ.இண்டீஸ் அதிரடி எவர்டன் வீகெஸ் மரணம்

பார்படாஸ்: வெஸ்ட் இண்டீசின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்  சர் எவர்டன் டீகவுர்சி வீகெஸ்(95) நேற்று முன்தினம் பார்படாசில் உள்ள தனது வீட்டில் திடீர் மாரடைப்புக் காரணமாக உயரிழந்தார். மேற்கு இந்தியத்தீவு நாடுகளில் ஒன்றான பார்படாசில் 1925ம் ஆண்டு பிறந்தவர்  வீகெஸ். அதிரடி பேட்ஸ் மேனான வீகெஸ், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 1948முதல் 1958 வரை 10 ஆண்டுகள் 48 டெஸ்ட்களில் விளையாடி 4,455 ரன் குவித்துள்ளார். அதிகபட்சமாக இரட்டை சதம்(207) விளாசியுள்ளார். மேலும் 15சதங்கள் எடுத்துள்ளார். அதிலும் அறிமுகமான ஆண்டில் 141, 128, 194, 162, 101 என்று தொடர்ந்து 5 ஆட்டங்களில் 5 சதங்களை விளாசிய சாதனைக்காரர்.

முதல் சதம் இங்கிலாந்துக்கு எதிராகவும், மீதி 4சதங்கள் இந்தியாவுக்கு எதிராகவும் எடுத்துள்ளார். அதுமட்டுமல்ல 6வது ஆட்டத்தில் 90ரன் எடுத்து சதத்தை நெருங்கி இருந்த போது ரன் அவுட் ஆனது தனிக்கதை. டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 1000ரன் குவித்த வீரர் என்ற பெருமையும் இவருக்குதான் உண்டு. இவர் காலத்தில், கிரிக்கெட்டில்  டெஸ்ட் போட்டி மட்டும்தான். டெஸ்டில் அதிக ரன் சராசரி வைத்திருக்கும் 10 வீரர்கள் இன்றும் 8வது இடத்தில் நீடிக்கிறார் வீகெஸ். கூடவே 152முதல் தர போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 304ரன் விளாசியதுடன் 12,010 ரன் எடுத்துள்ளார்.

வீகெஸ் ஓய்வுக்கு பிறகு ஐசிசி அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர், அணி மேலாளர், தொகுப்பாளர், நடுவர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார். இங்கிலாந்து அரசு 1995ம் ஆண்டு வீகெசின் திறமை, விளையாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி  இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கி கவுரவித்தது. வீகெஸ் மறைவுக்கு கிரிக்கெட் சங்கங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

3 ‘டபிள்யூ’கள்
வீகெஸ் விளையாடிய அதே காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிளெய்டு வால்காட், ஃபிராங்க் வொர்ரெல் ஆகியோரும் இருந்தனர். அதிரடி ஆட்டக்காரர்களான மூவரும் பல தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கியதால் அவர்களின் பெயரில் உள்ள ‘டபிள்யூ’வை கருத்தில் கொண்டு ‘3டபிள்யூ’கள் என்று அழைக்கப்பட்டடனர். பார்படாசில் உள்ள கென்சிங்டன் ஓவல் அரங்கில் ஒரு முனைக்கு ‘த்ரி டபிள்யூஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Tags : Death ,Everton Weekes , V. Indies, Everton Weekes, death
× RELATED பெங்களூரு கட்டட விபத்து – உயிரிழப்பு 7 ஆக உயர்வு