×

கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டும் டெல்லி மாநில அரசு: கொரோனா மையமாக மாறும் காமன்வெல்த் விளையாட்டு அரங்கம்..!!

டெல்லி: டெல்லி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்கனவே 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய மருத்துவமனை தயாராகி வரும் நிலையில் காமன்வெல்த் விளையாட்டு அரங்கில் தற்போது 600 படுக்கைகள் கொண்ட கொரோனா மையமாக மாற்றியுள்ளனர். டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,000-ஐ நெருங்கி வருகிறது. இதில் 58,348 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 30 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதில் 2,742 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா, தமிழகத்திற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களில் டெல்லி 3-வது இடத்தில உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சர்தார்பூர் மாவட்டத்தில் 10,000 படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவமனை மற்றும் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் 2,000 படுக்கைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்த திட்டத்தில் மேலும் 5,000 படுக்கைகளை சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக காமென்வெல்த் விளையாட்டு அரங்கை 600 படுக்கைகள் கொண்ட கொரோனா மையமாக டில்லி அரசு மாற்றியுள்ளது.

சில நாட்களில் இந்த மையம் செயல்பட தொடங்கும். இங்கு 80 மருத்துவர்கள் மற்றும் 150 செவிலியர்கள் நோயாளிகளை கவனிப்பார்கள். இங்கு மிதமான பாதிப்பு உள்ள நோயாளிகள் தங்க வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு கடுமையான அறிகுறி ஏற்பட்டால், ஆக்ஸிஜன் வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இங்கு ஆண் மற்றும் பெண் வார்டுகள் தனித்தனியாக உள்ளன. இரண்டிலும் தலா 300 படுக்கைகள் இருக்கும். தங்குமிடம் தேவைப்படக்கூடிய சுகாதாரப் பணியாளர்களுக்கும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர 40 ஹோட்டல்களையும், 80 திருமண மண்டபங்களையும் கொரோனா மையமாக மாற்றும் முயற்சியில் டெல்லி மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

Tags : Government of Delhi ,New Delhi ,Commonwealth Games Stadium ,Corona Center , Corona, Prevention Work, Delhi, Commonwealth Games Stadium
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...