×

மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில் கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த 50,000 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

சென்னை: மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில் கொரோனாவால் பாதித்தவர்களை தனிமைப்படுத்த 50,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனால் கொரோனா சிகிச்சைக்காக போதிய படுக்கைகளை அரசு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக 50,000 படுக்கை வசதிகளுடன் கூடிய மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தற்பொழுது வரை இந்தத் தனிமைப்படுத்தும் மையங்களில் சுமார் 10,000 நபர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வைரஸ் தொற்று கண்டறியவும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பாக சேவை வழங்குவதற்கு நுண் திட்டத்தை தயார் செய்துள்ளதாகவும், வைரஸ் தொற்று அறிகுறி உள்ள அனைவருக்கும் பரிசோதனை மாதிரி எடுக்கப்படும்.

ஒவ்வொரு 100 வீடுகளுக்கும் ஒரு களப்பணியாளர் நியமிக்கப்பட்டு அவர்களை கண்காணிக்க மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், சென்னையில் தினமும், சராசரியாக 10,200 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்தப் பரிசோதனைகளை 11,000 உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், சென்னையில் 10 லட்சம் மக்களுக்கு 21,000 பரிசோதனையும், தமிழ்நாட்டில் 7,000 பரிசோதனையும் செய்யப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில், சமூக களப்பணி திட்டம் செயல்படுத்துவதன் மூலம், கடந்த ஒரு வார காலமாக வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது, என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : SP Velumani ,Corona ,victims ,areas ,residents , Corona, Minister Velumani, Special Camp
× RELATED அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்ட பந்தலில் தீ விபத்து