×

அறந்தாங்கி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது: முதல்வர் பழனிசாமி ட்வீட்

சென்னை: அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே  உள்ள ஏம்பல் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த நாகூரான்-செல்வி தம்பதியரின் மகளான 7 வயது சிறுமி நேற்று முன்தினம் திடீரென காணாமல் போயுள்ளார். இதுகுறித்து ஏம்பல் காவல்நிலையத்தில் நேற்று அவர் புகார் அளிக்கவே, சிறுமியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள கண்மாயில் இருந்து சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது சிறுமியின் உடலில் காயங்கள் இருந்துள்ளன.

இதனால் அவர் கொலை செய்யப்பட்டு கண்மாயில் வீசப்பட்டு இருப்பது உறுதியான நிலையில், அதற்கான காரணம், அவரை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. இதையடுத்து சிறுமியின் சடலம் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பப்பப்பட்டது. இந்தநிலையில், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன், என கூறியுள்ளார்.


Tags : incident ,rape ,Palanisamy ,murder ,Aranthangi ,killing , Sexual Harassment, Aranthangi Girl, Murder, Chief Minister Palanisamy
× RELATED பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு...