×

சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் திடீர் உயிரிழப்பு...! கண்ணீரில் தத்தளிக்கும் மனைவி!

சென்னை:  சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்து தனியார் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் திடீர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த சுந்தரவேல் சிங்கப்பூரில் மேஸ்திரியாக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் அவர் தற்போது தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கடந்த 25ம் தேதி அவர் விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தேனாப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது அவர் திடீரென உயிரிழந்துள்ளார். தனியார் நட்சத்திர விடுதியில் இருந்த சுந்தரவேல் கடந்த 2 நாட்களாக தொலைபேசியை எடுக்காததால் சதேகமடைந்த அவரது மனைவி வலைதளத்தில் விடுதி எண்ணை தேடி, தொடர்பு கொண்டுள்ளார்.

அதன் பிறகே, விடுதி ஊழியர்கள் சுந்தரவேலின் அறையை சோதனையிட்டதில், அவர் உயிரிழந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தேனாப்பேட்டை காவல் துறையினர், சுந்தரவேலின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சுந்தரவேலுவுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உடல்நிலை சரி இல்லாத அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்க வில்லை என அவரது மனைவி சந்திரா குற்றம் சாட்டியுள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள சுந்தரவேலுவின் உடல், பிரேத பரிசோதனைகளுக்கு பிறகு, அவரது மனைவியிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து நடிகரும், திமுக இளைஞர் அணி தலைவருமான உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்டவரைக் கண்காணிக்க முடியவில்லை என்றால் எதற்குத் தனிமைப்படுத்த வேண்டும்? வெறும் கணக்குக் காட்டுவதற்கா? எளியவர்களின் கண்ணீர் உங்களை சும்மா விடாது. சந்திராவுக்கான உதவிகளை கழகம் முன்னின்று செய்யும். இவ்வாறு அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags : death ,star hotel ,Chennai ,Chennai Hotel ,Singapore , Man who returned from Singapore was isolated in chennai Hotel, found dead
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...