×

போதிய மழையின்றி பெரியாறில் தண்ணீர் திறப்பு தாமதம்: 60 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் முதல்போக பாசனத்துக்கு சிக்கல்

‘வானம் பார்க்கும்’ விவசாயிகள்

மதுரை: தென்மேற்கு பருவமழை துவங்கியும்,  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால், பெரியாறு அணையில் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் தண்ணீர் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் பெரியாறு பாசன நிலங்களான 60 ஆயிரம் ஏக்கரில் முதல்போக பாசனம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.    தென்மாவட்டங்களின் வாழ்வாதாரமாக அமைந்திருப்பது முல்லை பெரியாறு அணை. இதன் மூலம்  ஆண்டுக்கு இருபோக பாசன வசதி பெறும் ஆயக்கட்டு நிலங்கள் தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் என மொத்தம் 60 ஆயிரம் ஏக்கர் வரை பாசனம் பெறும்.  முதல் போக பாசனத்திற்கு ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறப்பது வழக்கம்.

ஆனால், தற்போது ஜூலை மாதம் பிறந்தும்  அணைக்கு போதிய அளவு நீர்வரத்து இல்லை. இதனால் தண்ணீர் இதுவரை திறக்கப்படவில்லை.
தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 7ம் தேதிக்கு மேல் துவங்கியும், எதிர்பார்த்த அளவு நீர்ப்பிடிப்பு பகுதியில் இன்னும் சரிவர மழை பெய்யவில்லை. தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு திறக்க பெரியாறு அணையில் 2 ஆயிரம் மில்லியன் கனஅடிக்கு மேல் தண்ணீர் இருப்பு இருக்க வேண்டும். வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள முதல்போகத்திற்கு திறக்க பெரியாறு அணை நீர் 4 ஆயிரம் மில்லியன் கனஅடிக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் நேற்றைய நிலவரப்படி பெரியாறு அணையில் 1,263 மில்லியன் கனஅடி, வைகையில் 578 மில்லியன் கனஅடி மட்டுமே உள்ளது.

வழக்கமாக மே 20ம் தேதிக்கு மேல் கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறியாக குளிர்ந்த காற்று வீசும். ஆனால் இந்தாண்டு, ஜூன் முதல் வாரத்தில்தான் துவங்கியது. பருவமழை துவங்கியும், தேக்கடி மற்றும் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்னும் சரிவர மழை பெய்யவில்லை.   ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும்.  போதிய அளவு மழை பெய்தால் மட்டுமே அணையில் நீர் தேங்கும். அதன்பிறகு அணை திறந்தால், முதல்போக சாகுபடி முழுமையாக நடைபெறுமா என்பதும் சந்தேகம்தான். இருப்பினும், மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Tags : opening ,Periyar , Water opening delay. 60 thousand acres of land, Periyar dam
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...