×

நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை; 59 சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது டிஜிட்டல் ஸ்டிரைக்...மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து..!!

புதுடெல்லி: 59 சீன செயலிகளுக்கு தடை விதித்திருப்பது டிஜிட்டல் ஸ்டிரைக் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி இந்திய, சீன ராணுவ வீரர்கள்  இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்க முயற்சித்த சீனா மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.  இதனால் சீனா பொருட்களை தவிர்ப்பது, சீன ஆப்களை மொபைலில் இருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகள் மக்கள் தாங்களாகவே முன்வந்து செய்கின்றனர்.

இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற டிக் டாக், ஹலோ, ஷேர் இட் உட்பட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு கடந்த மாதம் 29-ம் தேதி அதிரடியாக தடை விதித்தது. இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பம் துறை விடுத்துள்ள அறிவிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டை சேர்ந்த சில மொபைல் ஆப்கள், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி முறைகேடு செய்வதாக பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுபோன்ற தகவல் திருட்டுகள் தேச  பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்திடும்.

எனவே நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, தேச பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கினை கருத்தில் கொண்டு 59 ஆப்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2009ன் பிரிவு 69ஏவின் கீழ்,  அதிகரித்து வரும் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், 59 சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்ட நடவடிக்கையானது சீனா மீது தொடுக்கப்பட்ட ‛டிஜிட்டல் ஸ்டிரைக் என்றார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்காக, நாட்டு மக்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்காக நாங்கள் டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்தோம். நமது எல்லைகளைக் கவனிப்பவர்களின் பார்வையில்  எப்படிப் பார்ப்பது, நாட்டு மக்களைப் பாதுகாப்பது என்பது இந்தியாவுக்குத் தெரியும். இந்தியா, அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும் யாராவது நம்மிடம் அத்துமீற நினைத்தால் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்பதை  காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : country ,Chinese ,Ravi Shankar Prasad ,Country of Action , Action taken for the safety of the people of the country; 59 Chinese banned banned Digital Strike ... Union Minister Ravi Shankar Prasad
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!