×

அலங்காநல்லூர், திருப்புவனத்தை தொடர்ந்து மேலூரிலும் குவியும் மதுரை மதுபிரியர்கள்: கொரோனா பரவும் அபாயம்

மேலூர்: அலங்காநல்லூர், திருப்புவனத்தை தொடர்ந்து மேலூரிலும் மதுரை மதுபிரியர்கள் மது வாங்க குவிந்து வருவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா எண்ணிக்கையால் மதுரை மாநகராட்சி, திருப்பரங்குன்றம், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு- மேற்கு உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மதுபிரியர்கள் அங்கிருந்து மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை முற்றுகையிடுகின்றனர். இதில் அதிகளவாக திருவாதவூர் டாஸ்மாக் கடைக்கு மதுரை நகர், பரவை, வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், ஒத்தக்கடை, பூவந்தி பகுதிகளில் இருந்து தினசரி 1000க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.

ஒரு ஊராட்சிக்கு ஒரு டாஸ்மாக் கடை என்ற விதியை மீறி இந்த திருவாதவூரில் 2 டாஸ்மாக் கடைகள் ஏற்கனவே இயங்கி வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து இப்படி இங்கு வந்து மதுபிரியர்கள் குவிவது மேலும் தொற்று ஏற்பட வழிவகுக்கும்.டாஸ்மாக்கில் குவியும் யாரும் முகக்கவசம் அணிவதோ, சமூகஇடைவெளியை பின்பற்றுவதோ கிடையாது. டூவீலர், கார்களில் வரும் இவர்கள் ஒவ்வொருவரும் 10 முதல் 30 மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். தங்களுக்கு போக எஞ்சிய பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றால்தான் வந்து போகும் செலவுக்கு கட்டுபடியாகும் என அதற்கு விளக்கம் வேறு சொல்கின்றனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியிலும் பெயரளவிற்கு போலீசார் நிறுத்தப்படுகின்றனர். அவர்கள் யாரையும் கண்டிப்பதும் இல்லை, கேள்வி கேட்பதும் இல்லை. மாவட்ட எல்லையிலேயே போலீசார் இவர்களை கண்காணித்து திருப்பி அனுப்பினால், இதுபோன்ற நிகழ்வுகள் குறைய வாய்ப்புள்ளது. இதேநிலை நீடித்தால் மேலூர் பகுதியும் கொரோனா பிடியில் சிக்கி கொள்ளப்போவது உறுதி என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல் அலங்காநல்லூர், சமயநல்லூர், திருப்புவனம் பகுதிகளிலும் மதுபிரியர்கள் குவிந்து வருவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags : brewers ,Madurai ,spread ,Alanganallur , Alankanallur, Thiruppvanam, Melur, Madurai, Brewers, Corona
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...