×

சிவகங்கை மருத்துவமனை செல்லும் வழியில் அதிகளவில் வளரும் சீமைக்கருவேல மரங்கள்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மீண்டும் சீமைக்கருவேல் மரங்கள் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. ஏற்கனவே அகற்றியும் பயனில்லாத நிலை எற்பட்டுள்ளது. சிவகங்கையில் கடந்த 2011ம் ஆண்டில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பதில் புதிய மருத்துவமனையும், 2012ல் மருத்துவக்கல்லூரியும் இயங்க தொடங்கியது. ஏற்கனவே நேரு பஜார் சாலையில் அம்பேத்கர் சிலை அருகில் இருந்த தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்ட பிறகு மன்னர் துரைச்சிங்கம் அரசு கல்லூரி பின்புற பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்த மருத்துவமனைக்கு பிரதான வழியாக மானாமதுரை சாலையில் இருந்து சுமார் அரை கி.மீ தூரம் நடந்து செல்லும் வகையில் சாலை உள்ளது. இங்கு தினந்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் கர்ப்பிணி பெண்கள் அதிகம். காலை, மதியம், மாலை என பார்வையாளர்கள் நேரத்தில் மட்டுமே சிகிச்சை பெறுபவர்களை பார்க்க முடியும். பெண்கள் வார்டில் சிகிச்சை பெறும் பெண்களுடன், பெண்கள் மட்டுமே தங்க முடியும். கணவர், தந்தை உள்ளிட்ட ஆண்கள் யாரும் தங்க முடியாது. இதனால் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுபவர்களுடன் பெரும்பாலும் பெண்களே தங்கியுள்ளனர்.

மேலும் சிகிச்சைக்கு வருபவர்களிலும் பெண்களே அதிகம். மானாமதுரை சாலையில் இருந்து மருத்துவமனைக்கு சுமார் அரை கி.மீ தூரம் நடந்து வரும் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் மண்டிக் கிடந்தது. சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவடையடுத்து கடந்த 2019-2020ம் ஆண்டு தொடக்கத்தில் இருபுறமும் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் அதிகப்படியான நீர்த்தேவையில்லாத மாற்று மரங்கள் நட வேண்டும் என மரங்கள் அகற்றப்பட்டபோது கோரிக்கை வைக்கப்பட்டது. புங்கை, நாவல், வேம்பு, அரசு, புளியமரம், பூவரசு, ஆலமரம் உள்ளிட்ட செடிகளை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவ்வாறு செய்யாததால் மீண்டும் சீமைக்கருவேல மரங்களே முழுமையாக வளர தொடங்கியுள்ளது.

இந்த மரங்கள் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. மருத்துவமனையில் இருந்து ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டும் எனில் மானாமதுரை சாலைக்கு வரவேண்டும். மாலை நேரங்களில் இந்த சாலையில் வரபெண்கள் கடும் அச்சமடைகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது, ‘மருத்துவமனைக்கு ஆட்டோ, பஸ் அல்லது ஏராளமானோர் சேர்ந்தே வர வேண்டிய நிலை உள்ளது. மருத்துவமனைக்கு வரும் அனைத்து சாலைகளிலும் சீமைக்கருவேல மரம் அடர்ந்துள்ளதால் அச்சத்துடனேயே வரவேண்டியுள்ளது. ஏற்கனவே மரம் அகற்றிய நிலையில் ஆறு மாதங்களில் மீண்டும் அதிகப்படியாக முளைக்கத்தொடங்கியுள்ளது. இதனால் மரங்களை அகற்றியும் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் இம்மரங்களை அகற்றி விட்டு வேறு மரக்கன்றுகள் நட வேண்டும் என்றனர்.

Tags : Sivaganga Hospital Sivaganga ,hospital , ivaganga Hospital, Seemakiruwewale trees
× RELATED வெள்ளத்தில் தத்தளிக்கும் கர்நாடகம்...!!...