×

முதல்வரின் கடமை முடிந்துவிடவில்லை; சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்...மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை : இரட்டை கொலைக்கு காரணமான அனைவரது பெயர்களும் எப்ஐஆரில் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சாத்தான் குளம் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற தமிழக அரசு எடுத்த முயற்சிகள் தவிடு பொடியாக்கப்பட்டு கொலை செய்தவர்கள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தலையீட்டினால் உரிய சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.  குடும்பத்தின் கண்ணீர், மக்கள் போராட்டம், கடையடைப்பு, திமுக உள்ளிட்ட அரசயில் கட்சிகளின் கோரிக்கைகள், நீதிமன்றம், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டு அதிமுக அரசு சிக்கிக்கொண்டது.

தமிழக அரசு தொடக்கத்தில் இருந்தே கொலையை மறைக்க முயற்சித்தது. மூச்சுத்திணறி, உடல் நலமில்லாமல் இறந்தார்கள் என்று முதலமைச்சர் தீர்ப்பு எழுதினார். அரசு வழக்கறிஞர் பூசுமெழுகினார். இது லாக் அப் மரணமே அல்ல என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்னார். போலீசார் நீதிபதியே மிரட்டினர். தலைமைக்காவலர் ரேவதி மிரட்டப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. மேலிடத்தின் உதவி இல்லாமல் சாதாரண போலீஸ்காரர்களால் இவ்வளவும் செய்திருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சில கைதுகளைச் செய்துவிட்டு அனைவரது வாயையும் மூடிவிட்டோம் என்று தமிழக அரசு தப்புக் கணக்குப்போடக்கூடாது. அனைத்து தரப்பினரும் கண்காணித்துக் கொண்டுதான் இருப்பார்கள். கொலைக்குக் காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். பிரெண்ட்ஸ் ஆப் போலீசை சேர்ந்தவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

முதலமைச்சரின் கடமை முடிந்துவிடவில்லை, இப்போதுதான் தொடங்கி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : murder ,Sathankulam ,Stalin , The duty of the chief is not over; All those responsible for the double murder of sathankulam should be arrested ... Stalin's statement
× RELATED இன்ஸ்டா படுத்தும்பாடு… குளத்தில்...