×

ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசு, தனியார் பஸ்களுக்கு தடை: ஏமாற்றத்துடன் திரும்பிய பயணிகள்

வேலூர்: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, வேலூர் மண்டல போக்குவரத்து கழக்கத்தில் ரங்காபுரம், கொணவட்டம், கிருஷ்ணா நகர், ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், குடியாத்தம், பேரணாம்பட்டு உள்பட 10 பணிமனைகள் உள்ளன. இவற்றில் 629 பஸ்கள் உள்ளன. 100 பஸ்கள் வௌியூர்களுக்கும், 130 டவுன் பஸ்கள் என மொத்தம் 230 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது. பஸ்சில் 60 சதவீதம் பேர் மட்டுமே அதாவது 32 பேர் வரை இருக்க வேண்டும். மற்றும் கொரோனா கால விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று கண்டக்டர்கள், டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இருப்பினும் ெபரும்பாலான பஸ்களில் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. விதிமுறைகள் பின்பற்றவில்லை. இதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வகையில் பஸ் போக்குவரத்து அமைந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட பொது போக்குவரத்து சேவை நேற்று முதல் தடை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து நேற்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு அனைத்து அரசு பஸ்களும் அந்தந்த டிப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதையறியாத பொதுமக்கள் நேற்று காலை பஸ்சுகாக புதிய, பழைய பஸ் நிலையங்களுக்கு வந்தனர். அப்படி வந்த பயணிகளிடம் பஸ்கள் வராது என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஏமாற்றத்துடன் அவர்கள் ஆட்டோக்களில் புறப்பட்டனர். இதனால் பஸ் நிலையங்களும் வெறிச்சோடின. இந்த நீடிப்பு வரும் 15ம் தேதி வரை இருக்கும் என்றும், பின்னர் அரசின் அறிவிப்புக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும் என்றும், அதேபோல் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த அரசு ஊழியர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கான பஸ் போக்குவரத்து தொடர்ந்து செயல்படும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை: அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று அரசு பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் இன்றி முற்றிலுமாக வெறிச்சோடி காணப்பட்டது. பஸ் போக்குவரத்து தடைபட்டது அரசு அலுவலகங்களுக்கு வரும் அலுவலர்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து நகரப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்து சென்றனர்.

Tags : Government ,Thiruvannamalai ,districts ,Vellore , Vellore, Thiruvannamalai districts, government and private buses
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...