சென்னை: தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டார். இதன்படி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டார். மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையராக பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன் 3 ஆண்டுகள் கடந்து பணியாற்றியுள்ளார். 2017-ம் ஆண்டு மே 15-ம் தேதி சென்னை காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழக செயலாக்கம் பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இன்று சென்னை பெருநகர காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றார். சென்னை காவல் ஆணையராக பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்புகளை மகேஷ்குமாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர காவல் ஆணையராக நியமித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
கொரோனா தொற்றை தடுக்க விதிகளை கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும். ஊரடங்கு சமயத்தில் தேவையின்றி வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களது குறைகளை காணொலி காட்சி மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும். சென்னை பெருநகர காவல் எல்லையில் சுமார் 20,000 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்- அவர்களின் நலன் காக்கப்படும் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.