×

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் நக்சல்கள்?: ஊரடங்கை பயன்படுத்தி ஊடுருவியிருக்கலாம் என தகவல்!!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நக்சலேட்டுகள் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதால் அங்கு தீவிர ரோந்து பணிகள் தொடங்கியுள்ளன. ஊரடங்கை பயன்படுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நக்சலேட்டுகள் பதுங்கி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நக்சல் தடுப்பு சிறப்பு படையினர் துப்பாக்கியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அடர்வனமாக காட்சியளிக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில், பட்டுப்பூச்சி, தாணிப்பாறை, மாவூத்து உள்ளிட்ட இடங்கள் கேரள எல்லையில் அமைந்துள்ளன.

இதனால் ஊரடங்கை பயன்படுத்தி கேரளாவில் இருந்து இந்த இடங்களுக்கு நக்சலேட்டுகள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது தொடங்கியுள்ள ரோந்து மற்றும் தேடுதல் பணி அடுத்த ஒரு மாத காலத்திற்கும் இருக்கும் என்று  நக்சல் தடுப்பு சிறப்பு படையினர் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, மலைப்பகுதிகளிலும், அடி வாரங்களிலும் சுற்றி திரிவோரிடம் இவர்கள் தீவிர விசாரணையை நடத்தி வருவதோடு அவர்களின் சுய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.  மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி முழுவதும் சென்று வனப்பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? அல்லது சமூக விரோதிகள் பதுங்கி உள்ளனரா? என்பது குறித்து சோதனை செய்ய திட்டமிட்டு உள்ளனர். பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் நக்சல் தடுப்பு சிறப்பு படையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.



Tags : Srivilliputhur Western Ghats ,Western Ghats , Naxals on the Western Ghats? Information as it may be infiltrated using curfew !!!
× RELATED கன்றுக்குட்டியை தாக்கி கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்