சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட கடலூர் பயணி திடீர் மரணம்: அதிகாரிகள் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

சென்னை: கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் சுந்தரவேல் (36). கடந்த மாதம் 25ம் தேதி சிறப்பு விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து  சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். கொரோனா பரிசோனைக்கு பின் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டார். பின்னர் கடந்த 2 நாட்களாக சுந்தரவேல் அவரது வீட்டிற்கு போன் செய்யவில்லை. அவர்கள் போன் செய்தாலும் சுந்தரவேல் எடுக்க வில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி சந்திரா, ஓட்டலுக்கு தொடர்புகொண்டார். ஊழியர்கள் சுந்தரவேல் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது, அவர் கழிவறையில் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து தேனாம் பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இரண்டு நாட்களாக அவருக்கு கொடுக்கப்பட்ட உணவுகள் அனைத்தும் சாப்பிடாமல் அப்படியே இருந்தது தெரியவந்தது. ஊழியர்கள் அறையில் தங்கி உள்ள நபர்களை பார்க்காமல் உணவை மட்டும் வைத்துவிட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதனால் சுந்தரவேல் மாரடைப்பு காரணமாக இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். அவரது உறவினர்கள் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை அரசு அதிகாரிகள் சரியாக கவனிக்காததால்தான் சுந்தரவேல் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர். சுந்தரவேலுவுக்கு  2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு வயதில் மகன் உள்ளான்.

Related Stories: