×

போக்குவரத்து, மத்தியக்குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர்கள் பதவி ஏற்பு சென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் இன்று பதவியேற்பு

சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் இன்று பதவியேற்றுக் கொள்கிறார். அனைத்து பொறுப்புகளையும் ஏ.கே.விஸ்வநாதன் ஒப்படைத்து விடைபெறுகிறார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்தார். இவர் பதவிக்காலத்தில் தான் சென்னை மாநகரம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டது.  இவர் காலக் கட்டத்தில் தான் உயரிய விருதான போக்குவரத்து காவல் துறை மற்றும் சிசிடிவி கேமராக்கள் அமைத்ததற்கு என 3 ‘ஸ்காவச் விருது’ மாநகர காவல் துறைக்கு கிடைத்தது. மூன்று ஆண்டுகள் பணி முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் செயலாக்கத்துறை கூடுதல் டிஜிபியாக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டார். அவருக்கு பதில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக செயலாக்கத்துறையில் இருந்த கூடுதல் டிஜிபி  மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால் சட்டப்படிப்பு முடித்துள்ளார். அவரது தந்தை பிரகாஷ் அகர்வால் மூத்த வழக்கறிஞர். தனது தந்தையை போல் வழக்கறிஞரான மகேஷ்குமார் அகர்வால் நீதிபதியாக வரவேண்டும் என்று லட்சியம் வைத்திருந்தார். பின்னர் 1994ம் ஆண்டு யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். 22 வயதில் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தேனி எஸ்பியாக பதவி வகித்தார். அவரது பதவி காலத்தில் தேனியில் நடந்த ஜாதி கலவரங்களை திறமையாக அடக்கினார்.

மேலும், கள்ளச்சாராயத்தையும் ஒழித்தார். பிறகு தூத்துக்குடி எஸ்பியாக பதவி வகித்த அவர், சிபிஐயில் 7 ஆண்டுகள் பணியில் இருந்தார். பிறகு 2001ம் ஆண்டு மாநகர காவல் துறையில் பூக்கடை துணை கமிஷனராகவும், சென்னை போக்குவரத்து தெற்கு துணை கமிஷனராகவும், கூடுதல் கமிஷனராகவும் பதவி வகித்தார். அவரது பதவி காலத்தில் ரயில் குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் சிறுசேரியில் பெண் பொறியாளர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்த வழக்குகளில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தார். சிபிசிஐடி ஐஜியாக இருந்தபோது. ஓடும் ரயில் துளையிட்டு ரூ.5.75 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளையடித்த வழக்கிலும் குற்றவாளிகளை கைது
செய்தார்.

பிறகு மதுரை கமிஷனராகவும் மகேஷ் குமார் அகர்வால் சிறப்பாக பணியாற்றியுள்ளார். சிறந்த போலீசுக்கான விருது மற்றும் முதலமைச்சருக்கான விருதும் பெற்றுள்ளார். பல முறை சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் கூடுதல் கமிஷனராக இருந்தபோது ஏ.கே.விஸ்வநாதன் வெளிநாடு சென்று இருந்தபோது 3 நாள், கூடுதல் பொறுப்பாக போலீஸ் கமிஷனர் பதவியை கவனித்து வந்தார். மாநகர போலீஸ் கமிஷனராக சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகேஷ்குமார் அகர்வால் மனைவி  வனிதா சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஏ.கே.விஸ்வநாதன் நேற்று மாநகர காவல் துறையில் உடன் பணியாற்றிய கூடுதல் கமிஷனர்கள் ஜெயராமன், அருண், தினகரன், பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களுக்கு பணியின்போது ஒத்துழைப்பு வழங்கியதற்காக  விருந்து வைத்தார். இதற்கிடையே சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனராக கண்ணன் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக தேன்மொழி நேற்று பதவியேற்றுக் கொண்டனர். போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று பதவி ஏற்றப் பிறகு வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக அருண், தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராக தினகரன், தலைமையிட கூடுதல் கமிஷனராக அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று பதவியேற்க உள்ளனர். ரயில்வே டிஐஜியாக பாண்டியன் பதவி ஏற்றுக் கொண்டார்.

Tags : Madras Police Commissioner ,Maheshkumar Agarwal , Mahesh Kumar Agarwal sworn in as Commissioner of Police, Chennai
× RELATED விநாயகர் சதுர்த்திக்காக 10 ஆயிரம்...