×

காவல்துறையில் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பட்டினப்பாக்கம் எஸ்எஸ்ஐ உயிரிழந்தார்: 21 குண்டுகள் முழங்க பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பட்டினப்பாக்கம் காவல்நிலைய சிறப்பு எஸ்ஐ மணிமாறன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சென்னை சூளைமேடு சண்முகநார் சாலையை சேர்ந்தவர் மணிமாறன்(57). இவர் தமிழக காவல் துறையில் கடந்த 1986ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த மணிமாறன் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். பிறகு மாநகர காவல் துறையில் உள்ள பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். 8.5.2019ம் ஆண்டு முதல் அயல் பணியாக ஓய்வு பெற்ற ஐஜி சிவனாண்டியிடம் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் சிறப்பு எஸ்.ஐக்கு கடந்த மாதம் 11ம் தேதி இரவு 7.30 மணிக்கு திடீரென மூச்சு திணறல் மற்றும் உடல் நிலை சரியில்லாமல் போனது. உடனே குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. அதைத்தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மருத்துவமனை நிர்வாகம் மனைவி நிர்மலா மற்றும் மகன் ராஜேஷ் முன்னிலையில் ஒப்படைத்தது.

சிறப்பு உதவி ஆய்வாளர் உடல் பெசன்ட் நகர் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவருடன் பணியாற்றிய சக காவலர்கள் பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழக காவல் துறையில் கடந்த 17ம் தேதி மாம்பலம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரை தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் உயிரிழந்துள்ளார். இதனால் காவல் துறையில் கொரோனா பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. மாநகர காவல் துறையில் நேற்று முன்தினம் வரை 1,155 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : SSI ,death ,Pattanapakkam , Police, death toll, double rise, coronavirus, treatment, starvation SSI, casualties
× RELATED எஸ்எஸ்ஐயை தாக்க முயன்ற ரவுடி கைது