×

தூத்துக்குடி ஏஎஸ்பி குமார் நீலகிரிக்கு மாற்றம் அனைத்து கட்சிகள் போராட்டம் நடத்த முடிவு

ஊட்டி: ஊட்டியில் அனைத்துக் கட்சிகூட்டம் நேற்று நடந்தது. இதில். திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, முஸ்லிம்  லீக், மனித நேய மக்கள் கட்சி, தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: சாத்தான்குளம் வியாபாரிகள் மரண விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டை மிரட்டிய புகாருக்கு ஆளான தூத்துக்குடி ஏஎஸ்பி. குமார் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மாற்றம் செய்யப்பட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்ட ஒருவரை நீலகிரி  மாவட்டத்திற்கு நியமித்திருப்பதை இக்கூட்டம் கண்டிக்கிறது.

ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரது  இறப்பிற்கு நியாயம் கிடைக்கும் வரையில் இதில் சம்பந்தப்பட்ட ஏஎஸ்பி.  குமார் மற்றும் டி.எஸ்பி. பிரதாபன் உட்பட சம்பந்தப்பட்ட காவல் துறையினர் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யவேண்டும். நீதிமன்றத்தாலும், பொது  மக்களாலும் கண்டனத்திற்கு உரியவராக உள்ளவரும், நீதித்துறையை அவமதித்தவருமான  ஏஎஸ்பி. குமாரை நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள உத்தரவை உடனே  திரும்பப்பெற வேண்டும். தவறும் பட்சத்தில் விரைவில் மாவட்டம் தழுவிய அளவில்  மாபெரும் போராட்டம் நடத்துவது. நீதிமன்றத்தை நாடுவது. இவ்வாறு கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது.


Tags : parties ,protest ,Tuticorin ASP Kumar Nilgiris , Thoothukudi, ASP Kumar, Nilgiris, change, all parties, struggle
× RELATED காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம்