×

தேசிய மருத்துவர்கள் தினம் மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை: முதல்வர், கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும்  மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை என்று தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கொரோனா தொற்று பரவாமல் காத்திட இந்நாளில்  நாடு முழுவதும் அயராது பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். மருத்துவர்களின் பணியினை நாடே போற்றிக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை நான் இறைவனுக்கு நிகராக கருதுகிறேன். நேரம் காலம் பார்க்காமல், தன்னலம் கருதாமல், ஓய்வின்றி உழைக்கக் கூடியவர்கள் மருத்துவர்கள்.

இந்த பேரிடர் நோய்த்தொற்று காலத்தில், கடமை தவறாமல் கண்ணியத்துடனும், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை. மருத்துவர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு மகத்தான பணி செய்து வரும் மருத்துவர்களுக்கு எப்போதுமே துணை நிற்கும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். மனித உயிர்களைக் காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களின் வாழ்வு சிறக்கட்டும் என இத்தருணத்தில் வாழ்த்துவதோடு, இந்த நன்னாளில் மருத்துவர்களை நாம் நினைவு கூர்ந்து வாழ்த்தி, அவர்களுடைய பணி மென்மேலும் சிறக்க எனது  வாழ்த்துகளை அன்போடு  தெரிவித்துக் கொள்கிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: உயிர்காக்கும் உன்னத பணியான மருத்துவ பணியை மனமுவந்து மேற்கொண்டு வரும் மருத்துவர்களை சிறப்பிக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நன்னாளில் அனைத்து மருத்துவர்களுக்கும் எனது மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவிற்கான எதிரான அறப்போராட்டத்தில் மருத்துவர்களின் பங்கு அளப்பறியது. கொரோனா சூழலிலும் தன்னலம் கருதாது இரவு,பகல் பாராமல் அர்ப்பணிப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் : மருத்துவர்கள் பணி எப்பொழுதுமே புனித பணியாக கருதப்படுகிறது. தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்து இருக்கின்ற சூழலில் மருத்துவர்களின் தன்னலமற்ற பணி போற்றுதலுக்குரியது, பாராட்டுக்குரியது, நன்றிக்குரியது. மருத்துவர்கள் அனைவருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: மக்கள் உயிர் காக்க தன்னலம் பாராமல் பணியாற்றும் கடவுளின் பிரதிநிதிகளான டாக்டர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான மருத்துவர்கள் தின நல் வாழ்த்துக்கள்.

Tags : doctors ,party leaders ,CM , National Doctors Day, Doctor, Sacrifice, Nothing, CM, Party Leaders, Greetings
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை