×

திருப்போரூர் - நெம்மேலி சாலையில் கழிவுநீர் கலக்கும் பகுதியாக மாறிய செக்கடி தாங்கல் ஏரி: உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்போரூர்: திருப்போரூர் நெம்மேலி சாலையில் உள்ள செக்கடி தாங்கல் ஏரி, கழிவுநீர் கலக்கும் பகுதியாக மாறிவிட்டது. இதனை, உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். திருப்போரூரில் இருந்து நெம்மேலி செல்லும் சாலையில் செக்கடி தாங்கல் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை நம்பி சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஏரியை ஒட்டி கிழக்கு மாடவீதி, சான்றோர் வீதி ஆகிய தெருக்கள் உள்ளன. இங்கு 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த தெருக்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரியில் கலப்பதாலும், குடியிருப்புவாசிகள் குப்பைகள் மற்றும் வெளியிடங்களில் இருந்து கொண்டு வரப்படும் கோழி, ஆட்டிறைச்சி கழிவுகள் கொட்டுவதாலும் ஏரி நீர் மாசடைந்து காணப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் தங்களின் இயற்கை உபாதையை கழிக்கும் இடமாக இந்த ஏரியின் சுற்றுப்புறத்தை பயன்படுத்துகின்றனர். ஏரியை ஒட்டிய குடியிருப்புகளில், சமூக விரோதிகள் சிலர், இரவு நேரங்களில் அமர்ந்து மது அருந்தி விட்டு பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை ஏரிக்குள் வீசி செல்கின்றனர். இதையொட்டி, ஏரி நீர் மாசடைந்து விட்டதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நெம்மேலி சாலையில் திருப்போரூர் நூலகம் செயல்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான வாசகர்கள் இங்கு வந்து செல்கின்றனர். மேலும், பேரூராட்சி பூங்கா மற்றும் தனியார் பள்ளி ஆகியவையும் செயல்படுகிறது. இங்கு துர்நாற்றம் வீசுவதால் நூலகத்தில் உட்கார்ந்து படிக்க முடிவதில்லை என்றும், மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, திருவஞ்சாவடி தெரு ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மொத்தமாக செக்கடி தாங்கல் ஏரிக்கு சென்றடைகிறது. இதனால் இந்த ஏரி நீரை பயன்படுத்தி செய்யப்படும் பயிர்கள், போதிய வளர்ச்சியின்றி தவிக்கின்றன.னவே, இந்த ஏரியை பராமரிக்கும் பொதுப்பணித் துறை நிர்வாகம், இதில் கலக்கும் கழிவுநீரை தடுத்து ஏரியை முறையாக ஆழப்படுத்தி கரையில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி வேம்பு, புங்கன், பனை மரங்களை நட்டு சுற்றிலும் பூங்கா அமைத்து பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


Tags : lake ,Thiruppore - Nemmeli ,Sekkady ,part ,road , Thirupporeur - Nemmeli Road, Wastewater Treatment Area, Chekkady Bear Lake
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!