×

கொரோனா எண்ணிக்கையில் சீனாவை முந்தியது தமிழகம்: கோரத்தாண்டவம் தொடர்கிறது; எப்போதுதான் தீர்வு கிடைக்கும்?

சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம் தொடர்கிறது. தற்போதைய நிலவரப்படி, கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் சீனாவை முந்தியது தமிழகம். எப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்கப்போகிறதோ என்று மக்கள் புலம்ப தொடங்கியுள்ளனர். சீனாவில் உள்ள வுகான் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கு மேல் பரவி, 1,04,02,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் நிலவரப்படி அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 26 லட்சத்து 81 ஆயிரத்து 811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 5,75,295 பேர் பாதித்து, உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மார்ச் மாதம் 3வது வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு, தற்போதும் அது அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் கொரோனா தொற்றால் தினசரி 4 ஆயிரம் பேர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் குணமடைகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் அருகில் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 55 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 90,167 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குணமடைந்தவர்கள் 50,074 பேர். இதுவரை சிகிச்சை பலனின்றி 1,201 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேநேரம் சீன நகரம் முழுவதும் மொத்தம் இதுவரை 83,512 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 78,460 பேர் குணமடைந்துள்ளனர். 4,634 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அதன்படி பார்த்தால், சீன நகரம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட, இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமான தமிழகத்தில் மட்டும் 90 ஆயிரம் 167 பேர் பாதித்துள்ளனர். அதாவது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனாவை தமிழகம் முந்திவிட்டது. இதன் எண்ணிக்கை தினசரி மேலும் மேலும் அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விஷயம் ஆகும். சீனாவில் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தையும், சென்னையில் மட்டும் 2 ஆயிரத்தையும் தாண்டும் நிலை மக்களை அச்சம் அடைய செய்துள்ளது. இந்த, கொரோனாவின் கோரத்தாண்டவம் எப்போதுதான் முடிவுக்கு வரும் என்று மக்கள் புலம்ப தொடங்கி விட்டார்கள். இதற்கு, தமிழக அரசுதான் பதில் அளிக்க வேண்டும்.

Tags : China , Corona figure, overtaking China, Tamil Nadu, Gorattandavam
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...