×

வெளிநாடுகளில் சிக்கியவர்களை மீட்க ஏர் இந்தியா 16 சிறப்பு விமானம் வரும் 14ம் தேதி வரை இயக்கம்

சென்னை: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா நிறுவனம்  ஜூலை 1 (நேற்று) முதல் வரும் 14ம் தேதி  வரை 16 சிறப்பு விமானங்களை இயக்குகிறது. கொரோனா ஊரடங்கில் ஏராளமான இந்தியர்கள், வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க நேற்று முதல் வரும் 14ம் தேதி வரை தமிழகத்துக்கு ஏர் இந்தியா 16 சிறப்பு மீட்பு விமானங்களை இயக்குகிறது. அதில் சென்னைக்கு 10 விமானங்களும், திருச்சிக்கு 6 விமானங்களும் அடங்கும்.
அதன் விவரம் வருமாறு: துபாயில் இருந்து சென்னைக்கு 4 விமானங்கள் இயக்கப்பட்டன. ஒரு விமானம் நேற்று மாலை 5.20 மணிக்கு வந்தது. 4ம் தேதி இரவு 11.10 மணிக்கும், 9ம் தேதி மாலை 5.40 மணிக்கும், 11ம் தேதி இரவு 7 மணிக்கும் மற்ற விமானங்கள் வந்து சேரும். பக்ரைனில் இருந்து 3 விமானங்கள் சென்னைக்கு இயக்கப்படுகிறது. அந்த விமானங்களில் ஒன்று நேற்று இரவு 8.50 மணிக்கு வந்தது. மற்றவை 5ம் தேதி இரவு 11.45 மணிக்கும், 13ம் தேதி இரவு 11.50 மணிக்கும் சென்னை வந்து சேரும்.

அபுதாபியில் இருந்து 7ம் தேதி மாலை 5.35 மணிக்கும், சிங்கப்பூரில் இருந்து 6ம் தேதி மாலை 5.10 மணிக்கும், மலேசியாவில் இருந்து ஐதராபாத் வழியாக 12ம் தேதி மாலை 6.40 மணிக்கும் தலா 1 விமானம் சென்னைக்கு வருகிறது. சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு 4 விமானங்கள் இயக்கப்படுகிறது. அதில் ஒரு விமானம் கோவை வழியாக திருச்சிக்கு வரும். மலேசியாவில் இருந்து திருச்சிக்கு 2 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் வருபவர்கள் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

ஒவ்வொரு மீட்பு விமானத்திலும் சுமார் 160ல் இருந்து 180 பயணிகள் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை நடக்கும். பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். கட்டணம் செலுத்தி ஓட்டல்களில் தங்க முடியாதவர்களுக்காக, அரசு இலவச தங்குமிடங்கள் ஏற்பாடு செய்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகங்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் தங்க ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைத்துள்ளன.

Tags : Air India , Overseas, Trapped, Rescued, Air India, 16 Special Flight, Up to 14, Movement
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...