×

தமிழகத்தில் 100 நாட்களுக்கு பிறகு கிராமப்புற கோயில்கள் திறப்பு

* அரசின் பாதுகாப்பு நடைமுறையை கடைபிடிப்பதில் சிக்கல்
* அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த 100 நாட்களாக மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கிராமப்புறங்களில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் நேற்று திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து, பக்தர்கள் நேற்று காலையிலேயே கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோன்று நேற்று தேவாலயங்கள், மசூதிகளில் வழிபாடு நடந்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 20ம் தேதி முதல் கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இதனால் கடந்த 100 நாட்களாக பக்தர்கள் கோயில்களுக்கு சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் பல்வேறு சமய தலைவர்களுடன் கடந்த மாதம் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், ஒரு தரப்பினர் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என்றும், இன்னொரு தரப்பினர், கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டாம் என்றும் தெரிவித்தனர். இருப்பினும், தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், கோயில்களை திறப்பது தொடர்பாக முதல்வர் எடபபாடி பழனிசாமி உரிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று சமய தலைவர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில்தான் 6வது கட்ட ஊரடங்கை, ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்து அறிவித்தது. ஆனாலும், நோய் பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களில் சில தளர்வுகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோயில்கள், அதாவது ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் செய்ய ஜூலை 1ம் தேதி முதல் அனுமதிக்கப்படும். இந்த வழிபாட்டுதலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அதேநேரம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிவிப்பு வெளியிட்டார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 6ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில், ஜூலை 1ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பால், அங்கு பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை நேற்று முன்தினம் வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டார். அதன்படி, கொரோனா நோய் பாதிப்புள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கோயில்களை திறக்க கூடாது. 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்து வரக்கூடாது.

கோயில்களில் ஒருவரை ஒருவர் தொட கூடாது. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பஜனை செய்தல், பாடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது. உள்ளே செல்லும்  முன் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்ய, கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்ய வேண்டும். பிரசாரம், புனித நீர் போன்றவற்றை வழங்க கூடாது. தேங்காய், பூக்கள், பழம் எடுத்து செல்ல அனுமதி  கிடையாது. 5 பேருக்கு மேல் கூட கூடாது. கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 50 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் சுமார் 100 நாட்களுக்கு பிறகு, நேற்று முதல் கிராமங்களில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் காலையிலேயே திறக்கப்பட்டன. இதன் காரணமாக கோயில்களுக்கு சென்று மக்கள் வழிபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தர்காக்களுக்கு சென்று தொழுகை நடத்துவதற்கும், கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வதற்கும் வழி பிறந்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் உள்ள பல சிறிய கோயில்கள் நேற்று அதிகாலையிலேயே, திறக்கப்பட்டு முகக்கவசம் அணிந்து வந்த பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில வழிபாட்டு தலங்களில் மட்டுமே கொரோனா விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோனையும் நடைபெறுவதில்லை.

அதே நேரத்தில் கோயில்களில் சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள், கொரோனா வைரஸ் விரைவில் அழிக்கப்பட்டு, மக்கள் பழையபடி நிம்மதியாக, இயல்பாக வாழ வேண்டும் என்று வழிபட்டனர். அதேபோன்று தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில், சமூக இடைவெளி பின்பற்றி வழிபாட்டில் முகக்கவசம் அணிந்து பலர் கலந்து கொண்டனர். சிறிய கிராமப்புற கோயில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வகுத்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, கோயில்களில் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும். தெர்மல் ஸ்கேனர் வைத்து சோதனை செய்ய வேண்டும். பாதுகாப்பு குழு ஏற்படுத்த வேண்டும், 1 சதவீதம் சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை தெளிக்க வேண்டும், காலணிகள் பாதுகாப்பு இடத்தில் சானிடைசர் வைக்க வேண்டும், விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

ஆனால், ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் வரும் கோயில்களில் தெர்மல் ஸ்கேனர் வாங்குவது என்பது மிகவும் கடினம். அந்த கோயில்களில் சிசிடிவி கேமரா வைக்க முடியாத நிலை தான் உள்ளது. அதேபோன்று பெரும்பாலான கிராம கோயிலில் பூசாரி மட்டுமே பணியில் இருப்பார். அவர் ஒருவரால் கூட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாது.  சானிடைசர் வைக்கவோ, கிருமி நாசினி கொண்டு தெளிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று.
மேலும், ஆடி மாதம் வர இருப்பதால் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் கோயில்களில் கூட்டம் அலைமோதுவதுண்டு. குறைவான வருவாய் உள்ள கோயில்களில் பாதுகாப்பு குழு அமைத்து பக்தர்களை கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம். இப்படிப்பட்ட சூழலில் அரசின் பாதுகாப்பு நடைமுறைகளை எப்படி அந்த கோயில்களின் பின்பற்ற வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிட்டு, அந்த கோயில்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

* ஆடித்திருவிழா களைகட்டுமா?
கிராமப்புற கோயில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வாரத்தில் ஆடி மாதம் பிறக்க உள்ளது. இந்த மாதத்தில் தமிழகம் முழுவதும் அம்மன் கோயில்களில் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், தற்போதைய சூழலில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, ஆடி மாதத்தில் திருவிழாவை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அவ்வாறு ஆடி திருவிழா நடந்தால் கூட கோயில்களில் சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய முடியுமா என்ற சந்தேகமும், இந்தாண்டு ஆடித்திருவிழா களைகட்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags : temples ,Tamil Nadu , In Tamilnadu, 100 Days, Rural Temples, Opening
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு