×

நெய்வேலி என்எல்சியில் பயங்கர விபத்து பாய்லர் வெடித்து 6 பேர் பலி: 17 பேர் படுகாயம்

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின்நிலையத்தில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறியதில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் நெய்வேலியில் பதற்றம் நிலவுகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனம் மூன்று நிலக்கரி சுரங்கங்களும், 5 அனல் மின் நிலையங்களையும் கொண்டு இயங்கி வருகிறது. மின்சார உற்பத்தி பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள், அதிகாரிகள் என 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 2ம் அனல்மின் நிலையத்தில் மொத்தமாக 7 யூனிட்டில் 1470 மெகா வாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை முதல் ஷிப்ட்டில் 2 ஆயிரம் பேர் பணியில் இருந்தனர். அப்போது அங்குள்ள ஐந்தாவது யூனிட் பகுதியில் உள்ள பாய்லர் அழுத்தம் தாங்காமல் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பணியில் இருந்த ஊழியர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 17 பேரும் ஆம்புலன்ஸ் மூலமாக என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாய்லர் வெடித்ததால் வெளியான கரும்புகை பல கிலோமீட்டர் தூரத்துக்கு தெரிந்தது. தகவலறிந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீரும், அலறி அடித்து என்எல்சியை நோக்கி ஓடிவந்து அனல் மின்நிலையத்தை முற்றுகையிட்டனர். மருத்துவமனைக்கு முன்பாகவும் ஏராளமானவர்கள் திரண்டனர். முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 17 தொழிலாளர்களும் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். .

கடலூர் எம்பி ரமேஷ், எம்எல்ஏக்கள் சபா ராஜேந்திரன், சரவணன், கணேசன், கலைச்செல்வன், தொமுச நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும், என்எல்சி தலைவர் ராகேஷ்குமார் மற்றும் என்எல்சி உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். நெய்வேலி விபத்து குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடியை தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டறிந்துள்ளார். தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

* மூன்றாவது விபத்து
நெய்வேலி 2ம் அனல் மின்நிலையத்தில் 6வது யூனிட்டில் கடந்த மே மாதம் 7ம் தேதி இதேபோன்று பாய்லர் வெடித்ததில் அங்கு பணியில் இருந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2 மாதத்துக்குள் 5வது யூனிட்டில் தற்போது மீண்டும் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2ம் அனல்மின்நிலையத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மொத்தமாக இதுவரை 3  விபத்துகள் இதே பகுதியில் நடந்திருக்கிறது. தற்போது பராமரிப்பு பணியை சரியாக செய்யாமல் 2 மாதத்துக்கு முன்கூட்டியே வேலையை துவக்கியதும் விபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

* பராமரிப்பின்மை, அனுபவமற்ற வடமாநில தொழிலாளர்களே காரணம்
என்எல்சியில் பராமரிப்பின்மை காரணமாகவே பாய்லர் வெடித்துள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாய்லரின் அழுத்தத்தை அவ்வப்போது அங்குள்ள மீட்டரில் சரிபார்க்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அழுத்தத்தை தாண்டினால் விபத்து ஏற்படும் அபாயம் மிக அதிகம். ஆனால் இப்பகுதியில் தொழில்நுட்ப ரீதியாக சரியாக பயிற்சி இல்லாத வடமாநிலத்தவரை நியமித்ததே விபத்துக்கு காரணம் என்ற புகாரும் எழுந்துள்ளது. இதற்கிடையே பாய்லரை சரியாக பராமரிக்காத 2வது அனல் மின் நிலையத்தின் முதன்மை பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

* 2 குழுக்கள் அமைத்து விசாரணை
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு பணியின்போது தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களை கண்டறிய  என்.டி.பி.சி நிறுவனத்தின் முன்னாள் தொழில்நுட்ப இயக்குனர் மகாபாத்ரா தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் என்எல்சி மின்சார இயக்குனர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது. இரண்டாம் அனல் மின் நிலையம், இரண்டாவது கட்டத்தில் உள்ள 4 யூனிட்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, என தெரிவித்துள்ளது.

* இறந்த தொழிலாளர்கள் யார் யார்?  
கல்லுமேடு வெங்கடேச பெருமாள் (28), காப்பான்குளம் சிலம்பரசன் (25), மேலகுப்பம் பத்மநாபன் (28), கொள்ளிருப்பு அருண்குமார் (27), நெய்வேலி நாகராஜ் (36), ஆத்திக்குப்பம் ராமநாதன் (46) ஆகிய ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் என்எல்சி அதிகாரி சிவக்குமார் (47) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Boiler explosion , Neyveli NLC, Terror Accident, Boiler Explosion, 6 Killed, 17 Injured
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் பாய்லர்...