×

5 மாதங்களாக பாதியில் நிறுத்தப்பட்ட காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணி மீண்டும் தொடங்கியது: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

வேலூர்: தமிழகம்-ஆந்திராவை இணைக்கும் காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. காட்பாடி-சித்தூர் சாலையில் தமிழகம்-ஆந்திராவை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக காட்பாடி ரயில்வே மேம்பாலம் உள்ளது. பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இந்த பாலம் எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சம் ஏற்பட்டது. இதனை சீரமைக்க வேண்டும் என நீண்டகாலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் ₹2 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்பேரில் டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கியது.

புதிய தொழில்நுட்பமான கார்பன் பைபர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீரமைக்கப்படும் என்றும், மேம்பாலம் 3 அல்லது 4 மாதங்களுக்குள் முழுமையாக பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பணிகள் தொடங்கி கடந்த 2 மாதங்களாக இரவு பகலாக விறுவிறுப்பாக பணிகள் நடந்து வந்தன. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது. பாதி அளவு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் பிப்ரவரி மாதம் முதல் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

மேலும் விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்தது. இதையடுத்து இன்று மீண்டும் சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணியை காலம்தாழ்த்தாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Katpadi Railway Bridge , Katpadi, Railway Bridge, Renovation
× RELATED தமிழகம்-ஆந்திராவை இணைக்கும் காட்பாடி...