×

கொரோனாவில் இருந்து மக்களை காக்க சித்த, ஹோமியோபதி மருத்துவர்களுக்கு முழு சுதந்திரம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை : ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பை குறைக்க மருத்துவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை காக்க சித்த, ஹோமியோபதி மருத்துவர்களுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருப்பதாக ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதாக ராதா கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 50,074 கொரோனா தொற்றில் குணம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தினமும் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதாகவும் சென்னையில் மட்டும் 10,000 பேருக்கு பரிசோதனை நடத்தப்படுவதாகவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். பொது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக 75.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.


Tags : Radhakrishnan Siddha ,doctors ,Health Secretary , Corona, People, Siddha, Homeopathy, Doctors, Full Freedom, Health, Secretary, Radhakrishnan, Information
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை