×

சாரல் மழை எதிரொலி குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: ஊரடங்கால் குளிக்க அனுமதியில்லை

தென்காசி: குற்றாலத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்த போதும் ஊரடங்கால் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் குற்றாலத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு கடந்த 3 மாதங்களாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத  விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் இங்கு சுற்றுலா வந்து அருவிகளில் நீராடி செல்வது வழக்கம். ஆனால், தற்போதைய ஊரடங்கால் சீசனை பற்றிய சிந்தனையே கேள்விக்குறியாக உள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் சாரலும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு சுமார் 1 மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலை அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. அதேசமயம் நேற்று பகலில் சாரல் குறைந்து மீண்டும் வெயில் அடித்தது. அந்திசாயும் மாலை வேளையில் மனதுக்கு இதமளிக்கும் வகையில் குளுகுளு தென்றல் காற்றும் வீசியது.  இந்த சாரல் மழையால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றில் ஓரளவு தண்ணீர் விழுந்தபோதும் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் சற்று தூய்மையாக தெளிந்தார்போல் ஆறுகளில் ஓடுவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags : Courtallam , Water influx, Courtallam waterfalls, rain,curfew , not allowed
× RELATED 8 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல்...