×

அழுகிவிழும் மாம்பழங்கள், சாலைக்கு வந்த பலாபழங்கள், வாழையிலே பழுத்த குலைகள் இனிக்காத முக்கனி சீசன்: ரூ.105 கோடி வர்த்தகம் பாதிப்பு

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் நெல், வாழை, ரப்பர், தென்னை போன்றவை பிரதான விவசாய பயிராக விளங்கி வருகிறது. அதனை தவிர பணப்பயிரான கிராம்பு, மிளகு, ஏலக்காய். ஜாதிக்காய் உள்ளிட்டவைகளும் விளைவிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் வாழை குலைகள், அன்னாசிப்பழம், பலாப்பழம், மாங்காய் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு கேரளா மற்றும் வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. மாவட்டத்தில் விளையும் விளைபொருட்கள் ஒழுகினசேரி அப்டா, தக்கலை, திங்கள்சந்தை மற்றும் மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு விவசாயிகள் கொண்டு சென்று தரத்திற்கு ஏற்றார் போல் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
 கேரள மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் இந்த சந்தைகளில் நேரடியாக வந்து மொத்தமாகவும், விளைநிலங்களில் இருந்தும் மொத்தமாகவும் வாங்கி செல்கின்றனர். ஆண்டுதோறும் குமரி மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் முக்கனிகளான மா, பலா, வாழை சீசன் ஆகும். குமரி மாவட்டத்தில் 4600 ஹெக்டேர் பரப்பில் வாழையும், 1200 ஹெக்டேர் பரப்பில் மாமரமும், 350 ஹெக்டேர் பரப்பளவில் பலாமரமும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனின்போது வாழைகள் மூலம் ரூ.92 கோடி அளவிற்கும், மாமரங்கள் மூலம் ரூ.12 கோடி அளவிற்கும், பலாமரங்கள் மூலம் ரூ.1 கோடியே 75 லட்சம் அளவிற்கும் வர்த்தகம் நடந்து வருகிறது.
 
 இதனால் விவசாயிகள் சாகுபடியை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த வருடம் முக்கனிகள் சீசன் தொடங்கிய நேரத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் ஏற்பட்டது. இதனால் விளைவிக்கப்பட்ட வாழைகுலைகள், மாங்காய், பலாபழங்களை வர்த்தகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.  ஆனால் கேரள மாநிலத்திற்கு குறைந்த அளவே ஏத்தன்குலைகள் வியாபாரத்திற்கு டெம்போக்கள் மூலம் செல்கிறது. கொரோனா பாதிப்பால் கேரள வியாபாரிகள் வராததால் வாழைகுலைகள் மாவட்டத்திற்குள் தேங்கியது. இதனால் வாழை குலைகளை வெட்டாமல், வாழையிலேயே பழுத்து அழுகியது. மேலும் கிராம பகுதிகளில் வாழைகுலைகள் கேட்கும் மக்களுக்கு குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
 வாழைதோட்டத்தின் அருகே உள்ள சாலையோரம் வாழைகுலைகளை வெட்டி விவசாயிகள் விற்பனை செய்யும் நிலை மாவட்டத்தில் பல பகுதிகளில் நீடித்து வருகிறது. இதனால் வாழைக்கு செலவு செய்த பணம் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க மாமரத்தில் விளைந்த மாங்காய்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்ைல. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் மாங்காய்களை மரத்தில் இருந்து பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். மாங்காய் சீசனின் போது மாங்காய் காய்த்து, விளைச்சல் அடைவதற்கு முன்பே வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடம் விலை நிர்ணயம் செய்துவிட்டு செல்வார்கள். பின்பு மாங்காய் விளைச்சல் அடைந்தபிறகு வியாபாரிகள் வந்து மாங்காயை பறித்து செல்வார்கள். இது வாடிக்கையாக நடந்து வருகிறது.

 ஆனால் இந்த கொரோனா தாக்கம் காரணமாக பிற மாவட்டங்களுக்கு மாங்காய்கள் விற்பனைக்கு செல்லாததால் எந்த வியாபாரியும் மாங்காயை வாங்க முன்வரவில்லை. இதனால் மரத்திலேயே பழுந்து அழுகி கீழே விழும் நிலை பல பகுதிகளில் இருந்து வருகிறது. இதே நிலைதான் பலாமரத்திலும் ஏற்பட்டுள்ளது. பலாமரத்தில் பலாகாய்கள் அறுவடை செய்யும்போது வியாபாரிகள் வந்து மொத்தமாக வாங்கி வெளி மாவட்டத்திற்கும், வெளி மாநிலத்திற்கும் அனுப்புவார்கள். பலாகாய்களை பழுக்க வைத்து பலாபழமாகவும், அல்லது மதிப்புகூட்டப்பட்டு பலாபழசிப்சாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளிமாவட்டம், கேரள வியாபாரிகள் வராததால், பலாகாய்கள் மரத்திலேயே பறிக்காமல் அப்படியே விவசாயிகள் விட்டுள்ளனர்.

 சில விவசாயிகள் அவரது விளைநிலங்களை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் மாங்காய், பலாகாய்களை வாங்கி பழுக்க வைத்து சாலையோரம் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் சாலையோரம் மாம்பழங்களும், பலாபழங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பதை காணமுடிகிறது. இதனை வாங்குவதற்கு மக்கள் ஆர்வமும் காட்டவில்லை. சில விவசாயிகள் பலாபழங்களை பறித்து அப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். மொத்தத்தில் கொரோனா பாதிப்பால் முக்கனிகள் விலையின்றி தேங்கியதால் குமரி மாவட்டத்தில் சுமார் ரூ.105 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து தோட்டக்கலை துணை இயக்குநர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பொருட்களை விவசாயிகளே விற்பனை செய்யும் வசதிகள் செய்ய கிராமங்கள் தோறும் உழவர் உற்பத்திகுழுக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உழவர்உற்பத்திகுழுக்கள் மூலம் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கபடுவதோடு, அவர்கள் சந்தைப்படுத்த போதிய இடம் தேர்வு செய்யப்படும். தற்போது குமரி மாவட்டத்தில் ரப்பர், தென்னை, வாழை விவசாயிகளுக்கு உழவர்உற்பத்திகுழுக்கள் உள்ளன. இதுபோல் காய்கறி, பூக்கள் விவசாயிகளுக்கு உழவர் உற்பத்திகுழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags : road ,season , rotten mangoes, fruit, road, ripe ripeness, life
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...