×

நெய்வேலி என்.எல்.சி-யில் நிகழ்ந்த விபத்து: 6 பேர் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் போராட்டம்!!!

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி யில் 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஊழியர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 17 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 5 பேரை காணவில்லை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.

 இதனால், ஊழியர்களும், அப்பகுதி மக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதேபோல் கடந்த மே மாதம் இதே அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீவிபத்துள்ளானது. அதில் 8 தொழிலாளர்கள் தீக்காயங்கள் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவற்றில் 5 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தொடர் தீ விபத்துகள் நிகழ்வதால் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து,  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவேண்டுமெனவும், உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Relatives ,accident ,NLC ,Neyveli , 6 killed in Neeveli NLC accident: Relatives struggle
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!