×

ராஜஸ்தானை தாக்கிய வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணியில் சென்னை டிரோன்கள்!: மத்திய அரசு பாராட்டு!!!

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் வெட்டுக்கிளிகளை விரட்டி அடிக்கும் பணியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவு வடிவமைத்த டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுமார் 25 மீட்டர் உயரத்தில் டிரோன்கள் பறந்து ரசாயன கலவைகளை தெளிப்பதால் வெட்டுக்கிளிகள் கொத்துக்கொத்தாக மடிகின்றன. சென்னை டிரோன்களின் திறனை பாராட்டியுள்ள மத்திய அரசு, 90 நாட்களுக்கு இரவில் பறந்தும், வெட்டுக்கிளிகளை அழிக்க சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் விவசாயிகளும், அரசு நிர்வாகிகளும் திணறி வருகின்றனர்.

எல்லைப்புற மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாபை தொடர்ந்து மராட்டியம், ஹரியானா மாநிலங்களுக்கு பின்னர், தற்போது உத்திரப்பிரதேசத்திலும் வெட்டுக்கிளிகள் ஊடுருவிவிட்டன. இவற்றை எப்படி ஒழிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றவர்களுக்கு தற்போது கைகொடுத்திருக்கிறது டிரோன் படைகள். குறிப்பாக சென்னையில் இருந்து இந்த வெட்டுக்கிளிகளை ஒழிப்பதற்காக 3 பிரம்மாண்ட டிரோன்கள் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய வெட்டுக்கிளிகள் முதலில் ராஜஸ்தான் மாநிலத்தை தான் இலக்காக வைத்தன.

அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் பெருமளவில் எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கின்றனர். சென்னையை பொறுத்தவரையில் கொரோனா காலத்தில் டிரோன்கள் மூலம், மருந்து தெளிக்கும் பணியை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அப்துல் கலாம் டிரோன் ஆராய்ச்சி பிரிவினர் மேற்கொண்டனர். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. எனவே, இதே தொழில்நுட்பத்தை வெட்டுக்கிளிகளை ஒழிக்கவும் பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்தனர். இது தொடர்பாக மத்திய அரசு சென்னையில் இருந்து டிரோன்களை ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டது. அதன்படிதான் தற்போது முதற்கட்டமாக தலா 50 கிலோ எடை கொண்ட 3 டிரோன்கள் ராஜஸ்தான் எல்லை பகுதிக்கு விரைந்திருக்கின்றன.

அங்கு கடந்த திங்கட்கிழமையில் இருந்து வெட்டுக்கிளிகளை ஒழிக்கும் பணியில் டிரோன்கள் ஈடுபட்டுள்ளன. இதற்காக டிரோன்களை இயக்கக்கூடிய வீரர்கள் சென்னையிலிருந்து ராஜஸ்தானுக்கு விரைந்திருக்கின்றனர். இந்த டிரோன்கள் 25 மீட்டர் உயரத்தில் பறந்து ரசாயன கலவைகளை தெளிக்கின்றன. இந்த டிரோன்கள் பேட்டரி மற்றும் பெட்ரோல் கொண்டு இயங்கும் தன்மை கொண்டவையாகும். பறக்கும் போது பெட்ரோல் தீர்ந்தால் பேட்டரியில் இயங்கி டிரோன்கள் தரையிறங்கும் சக்தி கொண்டவை. இவை வெட்டுக்கிளிகளை ஒட்டுமொத்தமாக கொள்வதாக இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் மத்திய அரசு இந்த டிரோன்களின் செயல்பாட்டை வெகுவாக பாராட்டியிருப்பதாக டிரோன் ஆராய்ச்சி பிரிவின் இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்திருக்கிறார்.

Tags : Rajasthan ,Madras , Madras drones in the task of destroying locusts that hit Rajasthan!
× RELATED இயக்குபவர்களின் பின்புலம்...