×

பாட்னா அருகே நடைபெற்ற திருமணத்தால் வைரஸ் பரவல்: மணமகன் உயிரிழந்த நிலையில் திருமணத்தில் பங்கேற்ற 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

பாட்னா: திருமண விழாவில் கலந்துகொண்ட 111 பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா நகரை அடுத்த பாலிகஞ்ச் என்ற ஊரை சேர்ந்த மென்பொருள் நிபுணருக்கு ஜூன் 15ம் தேதி திருமணம் நடைபெற்றது. மனம்முடித்த 2 நாட்களில் புது மாப்பிள்ளை திடீரென  மரணமடைந்துள்ளார். கொரோனா பரிசோதனை நடத்தப்படாமலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மணமகனின் உறவினர்கள் அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டதால் எடுக்கப்பட்ட வைரஸ் பரிசோதனையில் இதுவரை 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமல் மணமகன் உடல் எரியூட்டப்பட்டு விட்டதால் அவருக்கு வைரஸ் தொற்று இருந்ததா என்பதை கண்டறிய முடியவில்லை. பாட்னா திருமண விழாவில் பங்கேற்று இருந்த மேலும் 80 பேரை சுகாதார அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மென்பொருள் நிபுணர்  தீபாலி திருமணத்திற்காக தனது சொந்த  கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது. ஆனால் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருமணம் முடிந்த 2 நாட்களுக்கு பிறகு, மணமகனின் உடல்நிலை மோசமடையவே, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தும், தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைத்ததோடு, சமூக இடைவெளியை பின்பற்றாமல், 50க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்வில் பங்கேற்க குடும்பத்தினர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீகாரில் குடும்ப விழா ஒன்றின் மூலம் கொரோனா 100க்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது இதுவே முதன்முறையாகும்.


Tags : wedding ,Virus outbreak ,Patna ,bride ,coroners ,death ,COVID ,Groom , Bihar,Wedding,Patna,Corona
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!