×

உத்திரபிரதேசத்தில் முகாமிட்டுள்ள வெட்டுக்கிளிகள்: டிரோன் மூலம் பூச்சுக்கொல்லி தெளித்து 60% வெட்டுக்கிளிகள் அழிப்பு..!!

லக்னோ: வடமாநிலங்களை அச்சுறுத்தி வரும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளை டிரோன் எனப்படும் பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி அழிக்கும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் திரிந்த வெட்டுக்கிளிகள் தற்போது உத்திரபிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளன. தொடர்ந்து, உத்திரபிரதேசத்தில் முகாமிட்டுள்ள வெட்டுக்கிளிகளை டிரோன் மூலம் பூச்சுக்கொல்லி மருந்து தெளித்து சுமார் 60 சதவீதம் வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டுள்ளன. தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகரில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வேளாண் பயிர்களை இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகின்றன.

இவற்றை அழிக்க டிரோன் எனப்படும் பறக்கும் இயந்திரம் மூலம் பூச்சுக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தும் மையத்தின் கூடுதல் இயக்குனர் எஸ்.என்.சிங் தெரிவித்ததாவது, நாங்கள் சுமார் 60 சதவீதம் வெட்டுக்கிளிகளை அழித்துவிட்டோம். மத்திய அரசு, 4 டிரோன் இயந்திரங்களை அளித்துள்ளது. இந்த இயந்திரங்கள் வெட்டுக்கிளிகளை அழிப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறது என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த இந்த வெட்டுக்கிளிகள் உத்திரப்பிரதேசத்தின் பல இடங்களுக்கு படையெடுக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வடமாநிலங்களை கடந்து அண்டை நாடான நேபாளத்திற்கும் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. நேபாளத்தில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் வட்டமிடுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Tags : Uttar Pradesh , Locusts in Uttar Pradesh: 60% of locusts destroyed by drone spraying pesticide .. !!
× RELATED உ.பி.யில் திருமண ஊர்வலத்திற்காக காரை...