×

கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தாமல் அலட்சியம் நடமாடாத ‘நடமாடும் வாகனம்’: செயலற்று கிடக்கும் திட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு பகுதிகளுக்கு சென்று, ரத்தம் மற்றும் சளி மாதிரி சேகரிக்க இயக்கப்பட்ட வாகனம், காட்சி பொருளாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் திட்டம் செயலற்று கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கொரோனா நோய்த்தொற்றால் தற்போது வரையில் 2800க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்த ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்கள் வசித்து வரும் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றால் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்படுவது வழக்கம். இதனால் மருத்துவர்கள், சுகாதாரத் துறையினருக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதுடன், கால நேரமும் வீணாகி வந்தது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் சார்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அவர்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை சேகரிக்க நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகன சேவை  தொடங்கப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு இந்த வாகனத்தில் சென்று ரத்தம் மற்றம் சளி மாதிரி சேகரிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. துவக்கத்தில் கிராம பகுதிகளுக்கு சென்ற இந்த வாகனம், தற்போது காட்சி பொருளாக ஒரே இடத்தில் மாவட்ட பொது சுகாதாரத் துறை இணை இயக்குனர் அலுவலகம் வெளியே நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பணம் வீணாகி உள்ளதோடு, அரசு திட்டமும் செயலற்று உள்ளது. எனவே, கிராமங்களுக்கு சென்று, அறிகுறி உள்ளவர்களின் ரத்தம், சளி பரிசோதனை செய்யும் வகையில், வாகனத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : corona testing ,Corona , Corona test, negligence, non-moving, dates
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...