கொரோனா ஊரடங்கால் செட்டிநாடு கைத்தறி சேலைகள் முடக்கம்: ரூ.50 லட்சத்துக்கு மேல் நஷ்டம்

காரைக்குடி: கொரோனா ஊரடங்கால் காரைக்குடியில் செட்டிநாடு சேலைகள் விற்பனை செய்ய முடியாமல் முடங்கியதால் ரூ.50 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கானாடுகாத்தான் உள்ளிட்ட பகுதிகளில் செட்டிநாடு பாரம்பரிய கைத்தறி நெசவுக்கூடங்கள் அதிகளவு செயல்படுகின்றன. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், சினிமா படப்பிடிப்புக்கு வருபவர்கள் சேலைகளை அதிகளவில் விரும்பி வாங்கி செல்வர். தற்போது ஊரடங்கால் சுற்றுலாப்பயணிகள் வருகை தடைபட்டுள்ளது. இதனால் செட்டிநாடு சேலைகள் விற்பனையாகாமல் முடங்கியுள்ளன. இதனை நம்பியுள்ள 100க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலையிழந்துள்ளனர். நெசவாளர் வெங்கட்ராமன் கூறுகையில், ‘‘காரைக்குடியில் கட்டிடங்களை பார்க்க வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவர்.

இவர்கள் இங்குள்ள பாரம்பரிய பொருட்களையும் பார்வையிட்டு வாங்கி செல்வது வழக்கம். அந்த வகையில் 100 ஆண்டு பாரம்பரியமிக்க செட்டிநாடு கைத்தறி சேலைகளை அதிகளவில் விரும்பி வாங்கி செல்வார்கள். தற்போது கொரோனா காரணமாக சுற்றுலாப்பயணிகள் வருகை முற்றிலும் தடைபட்டுள்ளது. தவிர ஊரடங்கு காரணமாக  உற்பத்தி செய்த சேலைகளை, சென்னை போன்ற பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்ய முடியவில்லை. 5,000க்கும் மேற்பட்ட சேலைகள் விற்பனையாகாமல் உள்ளன. ரூ.50 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கும் வேலை தரமுடியவில்லை. வாழ்வாதாரம் பாதித்து தவித்து வருகிறோம். வங்கியில் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த முடியவில்லை. வங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.

Related Stories: