×

ஜோகோவிச் மீது தவறில்லை... கால்பந்து வீரர் மேட்டிக் ஆதரவு

மான்செஸ்டர்: கொரோனாவை பரப்பும் நோக்கில் ஜோகோவிச் டென்னிஸ் போட்டியை நடத்தவில்லை, அதனால் அவர் மீது தவறு ஏதுமில்லை... என்று செர்பிய கால்பந்து வீரர் நெமஞ்சா மேட்டிக் கூறியுள்ளார். கொரோனாவால் சோர்ந்து போயுள்ள வீரர்கள் மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக, மீண்டும் டென்னிஸ் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதில் ஜோகோவிச் ஆர்வம் காட்டினார். அதற்கு ஏற்ப ஜூன் மாத தொடக்கத்தில் செர்பியாவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதனால் பக்கத்தில் உள்ள பால்கன் நாடுகளில் உள்ள முன்னனி வீரர்களை வைத்து ஜூன் 2வது வாரத்தில் செர்பிய தலைநகர் பெல்கிரேடில் ‘அட்ரியா டூர் காட்சிப் போட்டி’யை நடத்தினர்.

அந்தப்போட்டியில் ரசிகர்கள், வீரர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவில்லை. கூடவே வீரர்கள் இரவு விருந்து, கேளிக்கை விடுதிகளுக்கு செல்வது, கை குலுக்குவது, கட்டித் தழுவுவது உற்சாகமாக பொழுதை கழித்தனர். ஆனால் போட்டி முடிந்த மறுநாள் முதல் ஒவ்வொரு வீரராக உடல்நிலை பாதிக்கப்பட்டனர். சோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதற்கு ஜோகோவிச்சும் தப்பவில்லை. அவரது மனைவிக்கும் கூட வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில் ஜோகோவிச் போட்டியை நடத்திய விதம்தான் கொரோனா தொற்று பரவக் காரணம் என்று பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து செர்பிய கால்பந்து வீரரும், மான்செஸ்டர் யுனைட்டட் அணி வீரருமான நெமஞ்சா மேட்டிக் கூறியதாவது: இங்கிலாந்தை விட செர்பியாவில் பாதிப்பு குறைவாக இருந்தது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து 3 மாதங்கள் வீட்டுக்குள் முடங்கி கிடந்த நம்மை, அரசுதான் நாம் விரும்பியதை செய்ய அனுமதித்தது. ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் எல்லாம் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். அதனால் ஜோகோவிச்சும்  டென்னிஸ் போட்டியை நடத்தினார். அது தவறானது அல்ல. முடங்கிக் கிடந்த வீரர்களுக்கு உதவி செய்ய விரும்பினார். அதனால் போட்டியை நடத்தினார். இதை விமர்சிக்கும் யாரும் அதற்கு முன்பு 20 ஆயிரம் ரசிகர்களுடன் நடந்த போட்டி குறித்து மவுனமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

Tags : soccer player ,Djokovic ,Matic , Djokovic, err, footballer Matic, backed
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!