×

சசிகலா புஷ்பா தொடர்பான புகைப்படங்களை நீக்க பேஸ்புக், கூகுள், யூடியூப்க்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா தொடர்பான அவதூறு புகைப்படங்களை நீக்க வேண்டும் என பேஸ்புக், கூகுள், யூ.டியூப் ஆகிய நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பேஸ்புக், கூகுள், யூ.டியூப் ஆகிய சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாகவும், தவறாகவும் சித்தரித்து போலியாக உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை நீக்குமாறு அந்த இணையதளங்களுக்கு உத்தரவிடக்கோரி கடந்த 2016ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்ததுடன், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கு தலா ரூ.2 லட்சம் என அபராதமாக சசிகலா புஷ்பா வழங்க வேண்டும் என கடந்த மாதம் 2ம் தேதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, சசிகலா புஷ்பா தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் தல்வந்த சிங் ஆகியோர் அமர்வில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக், தனி நீதிபதி வழங்கிய ஆணை மற்றும் அபராதத்திற்கு தடை விதிக்க வேண்டும். அதேப்போல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை நீக்க சமூக வலைதளங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார்.

இதையடுத்து சமூக வலைதளங்களின் தரப்பில் மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகிஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவில், ஒரு பெண்ணின் தனியுரிமை கொண்ட அவரது படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளதை நீதிமன்றம் அனுமதிக்காது. அவ்வாறு மீறப்படும் போது அது கிரிமினல் குற்றமாகத்தான் கருதப்படும்’’ எனக்கூறி, இந்த வழக்கில் ஏற்கனவே தனி நீதிபதி வழங்கிய உத்தரவு மற்றும் அபராதத்தை ரத்து செய்தனர். மேலும், அவதூறான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கி, அதுதொடர்பான அறிக்கையை வரும் 8ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Delhi High Court ,Sasikala Pushpa Delhi High Court ,Sasikala Pushpa , Sasikala Pushpa, delete photo, Facebook, Google, YouTube, Delhi High Court, order
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...